Monday, August 17, 2015

பாங்காக்

சென்ற ஆண்டு அலுவல் நிமித்தமாக ஒரு பத்து நாட்கள் பாங்காக் சென்றிருந்தேன். ராஜ்ப்ரசாங் பகுதியில் இருக்கும் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தான் நாங்கள் (ஆறு பேர்) தங்கி இருந்தோம். எங்கள் ஹோட்டலின் அடுத்த கட்டிடம் தான் இன்று குண்டு வெடிப்பு நடந்த கோவில். இந்துக் கோவிலாக இது இருந்த போதிலும், தாய் தேசத்தினர் பலரும் இந்த கோவிலுக்கு வருவதை பார்த்திருக்கிறோம். தினமும் காலை அந்த பகுதியில் வேலை செய்யும் தாய் தேசத்தினர் இங்கு வந்து இந்த கோவிலில் வாசனை பொருட்களை ஏற்றி வைப்பார்கள். அதன் பின்னரே அலுவல் செல்வார்கள்.

இந்த கோவிலை நாங்கள் தங்கி இருந்த பத்து நாட்களில் ஒரு நூறு முறை கடந்திருப்போம். ஒரு வேளை இந்த குண்டு அப்போது வெடித்திருந்தால் எங்களில் ஒருவர் கூட இறந்திருக்கலாம்.

இறந்தவர்கள் என்ன பாவம் செய்தார்கள்? இன்று யாரோ ஒரு மிருகத்தின் சிந்தனையில் உதித்த திட்டத்தினால் ஒரு சில குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்க கூடும், ஒரு சிலர் தங்கள் வாழ்க்கை துணையை இழந்திருக்க கூடும், ஒரு சிலர் தங்கள் உடல் உறுப்புகளை  இழந்திருக்க கூடும்.

இத்தகைய செயலை செய்தவனுக்கு மரண தண்டனை கொடுக்காமல், வேறு என்ன தண்டனை கொடுப்பது? மரண தண்டனையை எதிர்ப்பது ஒரு ஃபேஷனாக இப்போது ஆகி விட்டது. இம்மாதிரியான குற்றங்களுக்கு அவர்கள் ஏதேதோ காரணங்களை கற்பித்து மரண தண்டனைக்கு எதிராக வாதம் செய்கிறார்கள்.

என்ன செய்வது இறைவன் ஒரு சிலருக்கு தலையில் மூளையை வைப்பதற்கு பதிலாக குதத்தில் வைத்து விட்டான். தாய்லாந்தில் அம்மாதிரி குத மூளைக்காரர்கள் குறைவாக இருப்பார்கள் என்று நம்புவோம்.

குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு எனது அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, August 03, 2015

பொடிமாஸ் - 08/03/2015

கடந்த டிசம்பர் அல்லது ஜனவரியில் ஏதோ ஒரு நாள். தொடர்ந்து ஒரே வாரத்தில் இரு பெரும் பனிப் பொழிவுகள். வழக்கம் போல தங்கமணி உள்ளிருந்து உத்தரவு போட எனது drive way யை தனியாக சுத்தம் செய்து கொண்டிருந்தேன். முன்னரே பெய்த பனியினால் drive way இன் இரு ஓரங்களிலும் இடுப்பளவு பனிக்கட்டிகள் குவிந்து விட்டன.

மனதில் பல சிந்தனைக் குவியல்கள். அப்போது தான் ப்ரணவின் ஆசிரியர் அவன் படிப்பில் இன்னும் ஆர்வம் செலுத்த வேண்டும் என்றும், சரியாக எழுதுவது இல்லை என்றும், வகுப்பில் கவனம் செலுத்துவது இல்லை என்றும், ஏரோப்ளேன் ஓட்ட தெரியவில்லை என்றும், மல்டிபில் ரெக்ரஷன் அனாலிஸிஸ் தெரியவில்லை என்றும், அமிர்த வர்ஷினி க்கும் ஆபேரிக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றும், இப்படி இன்னும் பல இல்லை என்றும் பெரிய பட்டியல் ஒன்றை அளித்திருந்தார்.

சார் அவனுக்கு வயசு நாலு தான் ஆகுது என்று சொல்ல வந்து, ஆனால் சொற்கள் வெளிவராமல் நாவின் அடியில் அடங்கி, பெரு மூச்சாக வெளிப்பட்டது.

நான் சுத்தம் செய்வதை அறையில் இருந்து ப்ரணவ் பார்த்துக் கொண்டே இருந்தான். முன்பே சொன்னது போல அங்கே இருந்த பனிக்குவியலால் அவனுக்கு நான் சுத்தம் செய்வது சரியாக தெரியவில்லை. நான் எங்கள் வீட்டின் பனிக்கட்டிகளை எடுத்து சாலையில் போடுவது போல அவனுக்கு தெரிந்தது. உடனே தடால் புடால் என்று மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தவன், "அப்பா! you can't make a mess like this. Others will fall." என்றான். அவன் ஏன் அப்படி சொல்கிறான் என்பதை விளங்கி கொள்ளவே எனக்கு சில விநாடிகள் ஆனது.

ஒரு தகப்பனாக மிகவும் பெருமையடைந்த தருணம் அது. வெளியில் கடும் குளிர், இவனோ ஒரு மெல்லிய ஷார்ட்ஸ் மற்றும் சட்டை அணிந்திருக்கிறான். அவனுக்கே குளிர் நடுக்குகிறது. இந்த நிலையிலும், தனது தந்தையால் மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படக்கூடாது என்று நினைக்கும் அந்த சிவிக் சென்ஸ் இருந்தால் போதும். பெரிய படிப்பு படித்து கிழித்தவர்கள் எல்லாம் நாட்டுக்கு என்ன செய்து விட்டார்கள்?


இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க சுதந்திர தினத்தை தொடர்ந்து இங்கிலாந்து சென்றோம். ஒரு வார சுற்றுப் பயணம். மிகவும் நன்றாக இருந்தது. அதுவும் நாங்கள் சென்ற நேரத்தில் மூன்று முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் நடந்தன, விம்பிள்டன், ஆஷெஸ் கிரிக்கெட், மற்றும் ப்ரிடிஷ் க்ரான்ட் ப்ரி. எங்கு சென்றாலும் நல்ல கூட்டம். முதலில் நுழையும் போதே இமிக்ரேஷன் ஆஃபீசர் மிகுந்த நட்புடன் உரையாடினார். அமெரிக்காவில் செந்திலை பார்க்கும் கவுண்டர் போலவே மூஞ்சியை வைத்துக் கொண்டிருப்பார்கள். உள்ளே நுழையும் போதே எதற்கு இந்த ஊருக்கு வந்தோம் என்று இருக்கும். அடுத்ததாக கட்டிடங்கள் எல்லாம் பெரும்பாலும் கலோனியல் காலத்தின் பதிவுகளாகவே இருக்கின்றன. ஐந்தடுக்கு பாதாள மெட்ரோ ரயில் போக்குவரத்து. சுமார் 12 கிலோ மீட்டர்கள் பாதையை கட்டி முடித்து அது என்னால் முடிந்ததா உன்னால் முடிந்ததா என்று நம்மவர்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் லண்டன் மெட்ரோ 1863 ஆம் ஆண்டு தொடங்கியது என்பதை அறியும் போது நமக்கு பிரமிப்பாக இருக்கிறது. "ஊர கொள்ளையடிச்சு உலையில போட்டா ஏன் செய்ய முடியாது?" என்று எனக்கு நானே அதற்கு சமாதானமும் சொல்லிக் கொண்டேன்.

லண்டன் நகரின் பரப்பளவு சுமார் 600 சதுர மைல்கள் தான். அதனை ஒரு வட்டமாக பாவித்தால் சுமார் 25 மைல்கள் பயணம் செய்தால் அதனை முழுதுமாக கடந்து விடலாம். அப்படிப்பட்ட நகரத்தின் அடியில் சுமார் 260 மைல் நீள ரயில் பாதைகள் போடப்பட்டு இருக்கின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு காரோ, பஸ்ஸோ, டாக்சியோ தேவையே இல்லை.

பொது வெளியில் மது அருந்துவது சட்டப்படி தவறு என்றாலும் அங்கே பலர் அவ்வாறு செய்வதை பார்க்க முடிந்தது. பக்கிங்காம் மாளிகையின் வெளியே உள்ள ஒரு பகுதியில் பலர் மது அருந்திக் கொண்டிருந்ததை கண்டேன். அது போலவே லண்டனில் இருந்து மில்டன் கெய்னஸ் என்ற பகுதிக்கு வெர்ஜின் விரைவு ரயிலில் பயணம் செய்யும் போது அங்கும் பலர் மது அருந்துவதை கண்டேன்.

அடுத்ததாக என்னை ஆச்சரியப்படுத்தியது அந்நகரின் பசுமை. உலகின் மிகவும் காஸ்ட்லியான நகரில் இருந்து சுமார் 20 மைல்கள் பயணத்தில் என்னால் பல ஆடு, மாடு, மற்றும் குதிரை பண்ணைகளை பார்க்க முடிந்தது. நம்மூராக இருந்திருந்தால் லண்டனுக்கு மிக அருகில் என்று அதிகாலை இரண்டு மணிக்கு யாராவது கூவிக் கூவி விற்றுக் கொண்டிருப்பார்கள்.

அமெரிக்கர்களை விட பலர் அங்கே கட்டுக் கோப்பாக இருக்கிறார்கள். உணவின் அளவு அமெரிக்க அளவில் பாதி கூட இல்லை. சென்ற முதல் நாள் ஒரு கடையில் எக்ஸ்ட்ரா லார்ஜ் பர்ரீடோ வாங்கினோம். அது அமெரிக்க அளவில் பாதி இருந்தது. மாலை ஐந்து மணிக்கே எல்லா கடைகளையும் மூடி விடுகிறார்கள். இப்படி இருந்தால் எப்படி வியாபாரம் நடக்கும், லாபம் வரும்?

நாங்கள் சென்ற நேரம் கோடை காலம் ஆனதால் இரவு 11 மணி வரை வெளிச்சம் இருந்தது. அதனால் இரவு நேர லண்டனை பெரிதாக மகிழ்ந்து அனுபவிக்க இயலவில்லை. அடுத்த முறை டிசம்பர் மாதம் செல்ல வேண்டும். மொத்தத்தில் லண்டன் ஒரு நல்ல அனுபவமாக இருந்தது.


சென்ற வாரம் கிரீஸ் நாட்டின் வீழ்ச்சிக்கு முதலாளித்துவமே காரணம் என்று பலர் ஜல்லியடித்துக் கொண்டனர். உண்மையில் கிரீஸ் நாட்டின் வீழ்ச்சிக்கு சோஷியலிசமே காரணம். 54 வயதில் ஓய்வு, அதிக அளவு ஓய்வூதியம், வாரத்துக்கு 35 மணி நேரம் மட்டுமே வேலை, என்றெல்லாம் இருந்தால் எப்படி ஒரு நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையும்? இன்னும் 30 ஆண்டுகளில் கிரீஸ் நாட்டில் 60 வயதை கடந்தவர்கள் சுமார் 50 சதவிகிதம் இருப்பார்கள் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. இப்படி இருக்கும் ஒரு நாட்டில் ஓய்வூதியத்தை அளித்துக் கொண்டே இருந்தால் எப்படி? யாருடைய உழைப்பு அதனை ஈடுகட்டும்?

சோஷியலிசம் ஒரு வித sense of entitlement ஐ மக்கள் மனதில் விதைத்து விடுகிறது. மக்களை பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை தான். நான் மறுக்கவில்லை. ஆனால் அது குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பெற்றோர்களின் கடமை போன்றது. ஒரு வயது வரை நாம் பார்த்துக் கொள்ளலாம், அதன் பின்னர் அவர்கள் தான் தங்கள் காலில் நிற்க வேண்டும். அமெரிக்காவில் அனைத்து குழந்தைகளுக்கும் 12 ஆம் வகுப்பு வரை இலவச கல்வி. அதன் பின்னர் நீ என்ன ஆனாலும், நடுத்தெருவில் நின்று பிச்சை எடுத்தாலும் அரசாங்கம் கவலைப்படாது. அதே நேரம் பணக்காரர்களாக பார்த்து அதிக வரி விதித்து அவர்கள் தலையில் மிளகாய் அரைக்கும் வேலையையும் அமெரிக்க அரசு செய்யாது. ஒருவன் வாழ்ந்தாலும் சரி, வீழ்ந்தாலும் சரி அமெரிக்க அரசு கண்டு கொள்ளாது. அது தான் சரி என்பது தான் என்னுடைய கருத்தும்.


50 before 50 என்பதை இலக்காக வைத்திருக்கிறேன். இது வரை பல நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். குறைந்த பட்சம் ஒரு வாரம் தங்கிய நாடுகள் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் அந்த எண்ணிக்கை ஒன்பது. வயதாகிக் கொண்டே போகிறது. குழந்தை, படிப்பு என்றாகிவிட்ட பிறகு முன்பு போல பயணம் செய்ய இயலவில்லை. ஆனாலும் செய்ய வேண்டும் என்ற ஆவல் அப்படியே இருக்கிறது.

சென்ற ஆண்டு தான் ஜே கண்ணையன் பற்றி அறிந்தேன். அமெரிக்காவில் நல்ல வேலை வாய்ப்பு, வசதி என்று இருந்தவர், அவை அனைத்தையும் விட்டு விட்டு தனது மோட்டர் சைக்கிளில் உலகம் முழுதும் பயணம் செய்ய தொடங்கினார். அமெரிக்காவில் தொடங்கி, மெக்சிகோ சென்று, அனைத்து தென் அமெரிக்க நாடுகளையும் கடந்து, தென் கோடிக்கு சென்று அங்கிருந்து ஐரோப்பா கப்பலில் சென்று, அங்கிருந்து ஆப்ரிக்கா வந்து, ஆப்ரிக்காவின் தென் கோடி வரை வந்து, அங்கிருந்து இந்திய தென் கோடிக்கு கப்பலில் வந்து, பின்னர் அங்கிருந்து லடாக் சென்று தனது பயணத்தை முடித்திருக்கிறார். இந்த பயணத்தை மேற்கொள்ள அவருக்கு மூன்று ஆண்டுகள் ஆனது. இப்போது இந்தியாவில் இருந்து இது போன்ற பயணங்களை ஏற்பாடு செய்யும் நிறுவனம் ஒன்றை தொடங்கி இருக்கிறார். சமீபத்தில் நான் அறிந்து மிகவும் வியந்த ஒரு நபர்.

அவரை பற்றி அறிந்து கொள்ள http://jamminglobal.com/ தளத்திற்கு செல்லவும்.


Put Chutney தளத்தை முன்பே அறிமுகப்படுத்தி இருக்கிறேனா என்பது தெரியவில்லை. அவர்கள் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ. அட்டகாசம். நீங்கள் மார்வெல் காமிக்ஸ் ரசிகராக இருந்தால் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள்.



Saturday, August 01, 2015

இரு மரணங்களும் கொஞ்சம் வலியும்

சென்ற வாரத்தில் இரண்டு மரணங்கள். இறந்தவர்கள் இருவருமே இஸ்லாமியர்கள். ஆனால் ஒருவர் மரணத்துக்கு இந்த தேசமே அழுதது. மற்றொருவர் மரணத்தை இந்த தேசமே கொண்டாடி இருக்க வேண்டும். ஆனால் வேதனை என்னவென்றால் பலரும் அந்த மரணத்தையும் எதிர்த்தார்கள் என்பது தான்.

எப்படி அப்துல் கலாம் போன்றவர்களை தமிழர், இஸ்லாமியர் என்ற குறுகிய வட்டத்துக்குள் வைக்க முடியாதோ, அது போலவே யகூப் மேமன் போன்றவர்களையும் அடக்க முடியாது. அப்துல் கலாம் இந்த தேசத்தின் சொத்து. அனைவருக்கும் பொதுவானவர். அது போலவே யகூப் மேமன் இந்த தேசத்தின் எதிரி.

அவன் ISI பணத்தினை இந்தியாவிற்குள் கொண்டு வர உதவியவன். 300 அப்பாவிகளை பலி வாங்கிய குண்டு வெடிப்பு சம்பவத்தினை நடத்த உதவியவன். திட்டமிட்டபடி குண்டு வெடிப்பு நடந்த உடன் கராச்சியின் உள்ள ISI உளவாளி ஜாலியாவாலாவின் உதவியுடன் குடும்பத்துடன் தப்பி சென்றவன். பாகிஸ்தானின் ISI ஆல் அவனுக்கு யூஸுஃப் அஹமத் என்ற போலி பெயரில் போலி பாகிஸ்தான் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது, அவன் தாய்லாந்தில் ஒளித்து வைக்கப்பட்டான். இறுதி வரை அவனை பாதுகாக்க ISI முயன்றது.

அவன் தானாகவே முன் வந்து சரணடைந்தான் என்பதெல்லாம் கட்டுக் கதை. அவனை நேபாளத்தில் நேபாள போலீசார் கைது செய்தனர் என்பது தான் உண்மை. உண்மை இப்படி இருக்க, என்னமோ அவன் ஒரு மஹாத்மா போலவும் இந்தியா திட்டமிட்டு இஸ்லாமியர்களை பழிவாங்குகிறது என்பது போலவும் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. முக நூலில் ஒருவர் ஒன்றை பகிர்ந்திருந்தார். சுதந்திர இந்தியாவில் இது வரை 174 பேர் தூக்கில் இடப்பட்டதாகவும், அதில் 15 பேர் மட்டுமே இஸ்லாமியர்கள் என்றும். இதிலிருந்தே தெரியவில்லையா எது உண்மை எது திட்டமிட்டு சொல்லப்பட்ட பொய் என்பது.

அவன் இந்திய உளவுத்துறைக்கு தான் கைதான பிறகு ஒத்துழைப்பு கொடுத்தான் என்பதாலும் தனது குடும்பத்தினர் இந்தியா வர உதவி செய்தான் என்பதாலும் மட்டுமே அவன் செய்த குற்றங்கள் சரியாகி விடுமா? உயிரிழந்த 300 பேருக்கும், உடல் உறுப்புகளை இழந்த 2,000 பேருக்கும் இந்திய அரசும் நீதித்துறையும் நியாயம் அளிக்க வேண்டாமா?

பம்பாய் குண்டு வெடிப்பு என்பது பாகிஸ்தானின் ISI யால் திட்டமிடப்பட்டு இந்தியா மீது தொடுக்கப்பட்ட போர். இதில் மாற்றுக் கருத்து இருப்பவர்களுடன் விவாதிப்பதே சுவற்றில் முட்டிக் கொள்வதற்கு நிகர். ஒருவர் என்னடா வென்றால் பம்பாய் குண்டு வெடிப்பு பாஜக மற்றும் சிவசேனையின் மத அரசியலுக்கான பதிலடி என்று சொல்கிறார். பாகிஸ்தானில் எத்தனையோ இந்துக் கோவில்கள் இடிக்கப்பட்டு இருக்கின்றன. அதற்கெல்லாம் அங்குள்ள இந்துக்கள் குண்டு வெடிப்பு நடத்திக் கொண்டா இருக்கிறார்கள்? இதை சொல்வதன் மூலம் மசூதி இடிப்பை நான் ஆதரிப்பதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை. நான் கூறுவது அப்பாவி மக்களுக்கெதிரான தீவிரவாதம் எதன் காரணமாக வந்தாலும், எதன் பெயரில் வந்தாலும் அது எதிர்க்கப்பட வேண்டியதே. ஒரு தவறை இன்னொரு தவறால் நியாயப்படுத்தவே முடியாது.

மற்றொருவர் யாரோ ஒரு பாஜக எம்பி இஸ்லாமியர்கள் எல்லோரும் பாகிஸ்தான் போங்கள் என்று உளறினான் என்பதற்காக இந்திய தேசத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சரி என்று எழுதுகிறார். இரண்டாண்டுகளுக்கு முன்பு ஒவைசி, "சட்டம் தனது கண்ணை மூடிக் கொண்டிருந்தால் இந்த தேசத்தின் 80 கோடி இந்துக்களையும் 15 நிமிடங்களில் அழித்து விடுவோம்" என்று சொன்னது பாவம் அவருக்கு தெரியவில்லை போலும்.

இஸ்லாமியர்கள் ஹிந்து மத வெறியர்களிடமிருந்து தங்களை காத்துக் கொள்ள வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் தங்களை ஒவைசி போன்ற மத வெறியர்களிடமிருந்தும், செக்யூலரிசம் பேசும் பன்னாடைகளிடமிருந்தும் காப்பாற்றிக் கொள்வது. இவர்கள் தான் தீவிரவாதிகளுக்கு இஸ்லாமியர்கள் என்ற மத சாயம் பூசுபவர்கள். இவர்கள் தீவிரவாதிகளால் இறந்த இஸ்லாமியர்களுக்காக ஒரு சொட்டு கண்ணீர் கூட வடிக்க மாட்டார்கள். ஆனால் அஃப்சல் குருவுக்கும், யகூப் மேமனுக்கும் ஆதரவாக வருவார்கள். ஒரு வேளை கசாப் பலரை கொல்லும் காட்சிகள் படமாக்கப் படவில்லை என்றால் அவனுக்கும் ஆதரவாக கிளம்பி இருப்பார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் கையாண்ட பிரித்தாளும் சூழ்ச்சியின் நீட்சியாகவே இவர்கள் இருக்கிறார்கள்.



அது சரி, யகூப் பற்றி நிறைய பேசியாகி விட்டது. கலாம் பற்றி பேச ஒன்றும் இல்லையா? என்று கேட்டால், பேச நிறைய இருக்கிறது. ஆனால் தேவை இருக்கிறதா? என்று கேட்டால், இல்லை. யாருமே பேசவில்லை என்றால் தான் நாம் பேச வேண்டும். இங்கு தான் எல்லோருமே கலாம் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்களே. குறிப்பாக ஜெயமோகனின் கலாம் குறித்த கட்டுரை அருமை. கீழே அதிலிருந்து சில பகுதிகள்.

"அவர் தனக்கென வாழவில்லை. இந்த நாட்டை அவர் விரும்பினார். இதன் மக்கள் சுபிட்சமாக வாழவேண்டுமென கனவுகண்டார். அதற்காக தன் முழு வாழ்க்கையையும் அர்ப்பணித்தார். தனக்கென எதையும் சேர்க்கவில்லை. அத்தகைய மகத்தான முன்னுதாரணங்கள் நம் முன் இன்று குறைவே.

தனக்கும் தலைமுறைகளுக்கும் சொத்துசேர்ப்பதன்றி பிறிது எதையுமே அறியாதவர்கள் தலைவர்களாகக் கொண்டாடப்படும் இந்நாட்டில் இளைய தலைமுறையினர் அண்ணாந்து நோக்கும் இலட்சிய வடிவங்கள் மிகச்சிலவே. ஆகவேதான் கலாம் கொண்டாடப்படுகிறார். இலட்சியவாதத்திற்கு இன்னும் இங்கே பெருமதிப்பு உள்ளது என்பதையே காட்டுகிறது இது.
"

ஒரு சோறு பதம். அதனால் இதுவே போதும் என்று நினைக்கிறேன். கட்டுரையை முழுதும் படிக்க இங்கே செல்லுங்கள்.

http://www.jeyamohan.in/77432#

சாரு கேட்கிறார், "கலாம் பற்றிப் பேசும் போது அவர் நல்லவர் என்று பாராட்டுகிறார்கள். ஒருவரை நல்லவர் என்று பாராட்டுகின்ற அளவுக்காக நாட்டில் நல்லவர்களின் எண்ணிக்கை அருகி விட்டது? மனிதனாகப் பிறந்த ஒருவரின் அடிப்படைப் பண்பு அல்லவா அது?" என்று. நியாயமான கேள்வி தான். ஆனால் எந்த நிலையில் இருந்து அப்படி வாழ்கிறோம் என்பது தான் ஒருவனது தன்மையை நிர்ணயிக்கிறது. சாதாரண மக்களாகிய நீங்களும் நானும் நல்லவர்களாக வாழ்வது ஒன்றும் பெரிய செயல் அல்ல. ஆனால் அதிகார மையத்தின் நடுவில் அமர்ந்து கொண்டு தவறு செய்ய பல வாய்ப்புகள் இருக்கும் பட்சத்திலும் அதனை செய்யாமல் இருக்க அசாத்திய மன திடம் வேண்டும். அதற்காகவே கலாம் போற்றப்படுகிறார்.

ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றி விமர்சிக்க கூடாது என்பதில் எனக்கு உடன்பாடில்லை, என்றாலும் அவர் செய்த செயல்களை வைத்து தான் அவரை விமர்சிக்கலாமே தவிர அவர் செய்யாததை வைத்துக் கொண்டு அவரை விமர்சிப்பது சரி என்று எனக்கு படவில்லை. எத்தனையோ பாரதரத்னாக்களை இந்திய மக்கள் பார்த்திருக்கிறார்கள். அவர்களுள் முதன்மையானோர்களின் பட்டியல் ஒன்று தயாரித்தால் அதில் கலாம் நிச்சயம் இடம் பெறுவார். RIP Mr. Kalam.