Sunday, May 26, 2013

பனீஷ் மூர்த்தி

பில் கிளின்டன் - மோனிகா லெவன்ஸ்கி விவகாரத்துக்கு பிறகு அதிகமாக இந்திய ஊடகங்களாலும், கார்பரேட் வட்டாரத்திலும் பெரிதாக பேசப்பட்ட விவகாரம் பனீஷ் மூர்த்தி - ரேகா மேக்ஸிமோவிட்ச் விவகாரம் தான்.

இந்த செக்ஸ் விவகாரத்தை விலக்கிவிட்டு பார்த்தால் பனீஷ் ஒரு கார்பரேட் ஐகான். சென்னை IIT யில் இஞ்சினியரிங் படிப்பையும் அஹமதாபாத் IIM இல் MBA படிப்பையும் முடித்தவர். 1995 ஆம் ஆண்டு இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். மிக விரைவில் பல பதவி உயர்வுகளை பெற்று அந்நிறுவனத்தின் போர்ட் ஆஃப் டிரக்டர்களுள் ஒருவராகவும் க்ளோபல் சேல்ஸ் ஹெட் ஆகவும் ஆனார். அவர் சேரும் போது 2 மில்லியன் டாலராக இருந்த அந்நிறுவனத்தின் ஆண்டு வருவாய் சில ஆண்டுகளிலேயே சுமார் 700 மில்லியன் டாலர்களை தொட்டது. அதற்கு காரணம் அவர் தான் என்று அனைவருமே அவருக்கு புகழாரம் சூட்டினர்.

ஆனால் வாழ்க்கை எப்போதும் ஃபேரி டேல் போல இருப்பதில்லையே. பொது வாழ்வில் அல்லது தங்கள் துறையில் பல வெற்றிகளை குவிப்பவர்கள் கூட சில நேரங்களில் தங்களின் சொந்த வாழ்வில் லூசுத்தனமாக ஏதேனும் செய்து விடுவார்கள். அதற்கு காந்தி, எயின்ஸ்டீன் என்று பல உதாரணங்கள் கூறலாம். பனீஷும் அதுமாதிரி ஒரு லூஸுத்தனத்தை செய்தார். அவரிடம் இருந்த காசுக்கு ஒரு ப்ரைவேட் ஜெட்டை எடுத்துக் கொண்டு வேகாஸோ, தாய்லாந்தோ, ஆம்ஸ்டர்டாமோ சென்று தினமும் ஒரு ஹுக்கர் என்று கொட்டம் அடித்து இருக்கலாம். ஆனால் பித்தம் தலைக்கு சென்றதால் தனக்கு கீழே பணி செய்த ரேகா மேக்ஸிமோவிட்ச் மீது கை வைத்து விட்டார்.

பாலியல் தொல்லைக்கு ஆளான ரேகா இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் மீது தொடர்ந்த வழக்கின் காரணமாக இன்ஃபோஸிஸ் நிறுவனம் 3 மில்லியன் டாலர்கள் பணத்தையும் தனது சிறந்த க்ளோபல் சேல்ஸ் ஹெட்டையும் இழந்தது. பனீஷ் அவ்வளவு காலம் சம்பாதித்த பெயரையும், புகழையும் தனது வேலையையும் இழந்தார்.

பனீஷின் காலம் முடிந்தது என்று பலரும் கருதிய போது க்வின்டென்ட் நிறுவனத்தை அவர் தொடங்கினார். தொடங்கிய ஒரே ஆண்டு காலத்தில் அந்நிறுவனத்தை ஐகேட் நிறுவனத்துக்கு விற்றார். கூடவே ஐகேட் நிறுவனத்தின் டிரெக்டர் ஆனார். அவர் சேர்ந்த போது கடும் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ஐகேட் நிறுவனத்தை லாபமடைய செய்தார். எட்டே ஆண்டுகளில் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாய் கொண்ட நிறுவனமாக மாற்றினார். பாட்னி நிறுவனத்தை ஐகேட் வாங்கியதில் இவரின் பங்கு தான் முக்கியமானது.

இப்படி எல்லாமே நல்லவிதமாக சென்று கொண்டிருக்கும் போது அரிப்பெடுத்தவன் கை சும்மா இருக்காது என்பது போல மறுமுறை கிடைத்த வாழ்வில் பொச்சை மூடிக் கொண்டு இல்லாமல் மீண்டும் தனக்கு கீழே பணி செய்த அராஸெலி ராய்ஸ் என்பவர் மீது கை வைத்திருக்கிறார். ஐகேட் நிறுவனம் அவரை பணி நீக்கம் செய்திருக்கிறது.

வாழ்வில் வெற்றியின் உச்சியில் இருந்து அதள பாதாளத்தில் விழுபவர்கள் அனைவருமே மீண்டும் எழுவது இல்லை. அப்படி பார்த்தால் பனீஷின் வாழ்க்கை நிச்சயம் அனைவருக்கும் ஒரு பாடம் தான். ஆனால் துரதிருஷ்டவசமாக கார்பரேட் வாழ்வில் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு அவரின் வாழ்க்கை பாடமாக அமைந்தது போலவே என்ன செய்ய கூடாது என்பதற்கும் அவரின் வாழ்க்கை பாடமாக அமைந்து விட்டது.

தனிப்பட்ட ஒருவர் செய்யும் தவறுகளுக்கு அவர் சார்ந்த நிறுவனம் பொறுப்பேற்க முடியாது என்றாலும் இந்த விவகாரத்தில் ஐகேட் நிறுவனம் மீதும் தவறு உள்ளதாகவே தெரிகிறது. பனீஷ் மீது செக்ஸ் குற்றச்சாட்டு பதிவான சூழ்நிலையிலும், அவர் மீது அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையிலும், தனது தேவைக்காக அவருக்கு வேலை வாய்ப்பளித்து அவரை பயன்படுத்திக் கொண்டது அந்த நிறுவனம். இப்போது நஷ்டத்தில் இருந்து மீண்ட உடன் பனீஷின் தேவை அந்நிறுவனத்துக்கு தேவை இல்லாமல் போய் விட்டது. அதனால் பணி நீக்கம் செய்திருக்கிறது.

பனீஷால் பாதிக்கப்பட்ட இருவருமே அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அவரால் இந்தியா போன்ற நாடுகளில் எவ்வளவு பேர் பாதிக்கப் பட்டார்களோ, அதில் எவ்வளவு குற்றச்சாட்டுகள் அமுக்கப்பட்டனவோ, யாருக்கு தெரியும்?

ஆனால் ஒன்று நிச்சயம், கார்பரேட் உலகம் கரும்பு சாறு எடுக்கும் இயந்திரம் போன்றது. நம்மை சக்கையாக புழிந்து தனக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு பின்னர் துப்பி விடும். நாம் தான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். முந்தைய இன்ஃபோஸிஸ் வழக்கில் நடந்தது போலவே இதிலும் அவுட் ஆஃப் கோர்ட் செட்டில்மென்ட் தான் நடக்க போகிறது. ஐகேட் நிறுவனமும் சில பல மில்லியன் டாலர்களை நஷ்ட ஈடாக கொடுத்து வழக்கை முடித்துக் கொள்ள போகிறது. நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் லாப தாகம் எடுத்த வேறொரு கார்பரேட் நிறுவனம் பனீஷை வேலைக்கு அமர்த்த தான் போகிறது. அங்கேயாவது அவர் எல்லாவற்றையும் மூடிக் கொண்டிருப்பார் என்று நம்புவோம்.

Tuesday, May 21, 2013

பொடிமாஸ் - 05/21/2013

1999 ஆம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி போட்டியில் வெல்ல முடியாமல் போனதை பற்றி லான்ஸ் க்ளூஸ்னரிடம் கேள்வி கேட்ட போது, "அதனால் என்ன? யாராவது செத்து விட்டார்களா?" என்று திருப்பி கேள்வி கேட்டாராம். உண்மையோ, பொய்யோ, நாம் அறியோம். ஆனால் இப்போது ஒன்றும் இல்லாத விஷயங்களுக்கெல்லாம் குய்யோ முறையோ என்று ஓசையிடும் நபர்களை பார்த்தால் இது தான் சொல்ல தோன்றுகிறது.

IPL மேட்சுகளில் பெட்டிங் பிரச்சனை பற்றி ஆளாளுக்கு உணர்ச்சிவசப்பட்டு ஓலமிடுகிறார்கள். IPL மேட்சுகளில் எல்லாம் பெட்டிங் இல்லாமல் இருந்தால் தான் அது செய்தி. இது போன்ற மேட்சுகள் எல்லாம் முன்கூட்டியே கொரியோக்ராஃப் செய்யப்பட்டு நமது அட்ரினல் பம்பை ஏற்றுவது போல இருக்க வேண்டும். சும்மா டொச்சு போல முதல் டீம் 200 ரன், இரண்டாவது டீம் 90 ரன் என்று இருந்தால் எவன் பார்ப்பான்.

துப்பாக்கி படத்தில் விஜய் கடைசியில் தோற்பாரா ஜெயிப்பாரா என்றா யோசிப்போம்? அவர் ஜெயிப்பார் என்று தான் குழந்தைக்கு கூட தெரியுமே. எப்படி ஜெயிப்பார் என்று தானே யோசிப்போம்.

IPL என்பது ஒரு சிலருக்கு பொழுதுபோக்கு, ஒரு சிலருக்கு பிசினஸ். யாரும் விளையாட்டுக்கு சேவை செய்ய அதை பல ஆயிரம் கோடி செலவு செய்து நடத்தவில்லை. இந்த பெட்டிங் செய்பவர்களை பிடிக்க முயற்சிக்கும் நேரத்தில் ஜாதி சண்டை போடுபவர்களையும், பிரிவினையை தூண்டுபவர்களையும், தீவிரவாதம் செய்பவர்களையும் பிடித்து தொலைக்க முயற்சி செய்தால் நலம்.

இன்னும் சொல்லப்போனால் புக்கிகளின் பணம் எல்லாம் இந்தியாவிற்குள் வருவது நன்மையே. கொஞ்சமே கொஞ்சம் கருப்பு வெளுப்பாக மாறும் வாய்ப்பு உள்ளது. இல்லை, இம்மாதிரி சூதாட்டத்தால் சாதாரண மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உங்கள் வாதமானால், டாஸ்மாக்கினால் ஏற்படும் பாதிப்பை விட சூதாட்டத்தினால் ஏற்படும் பாதிப்பு மிகவும் குறைவு என்பது எனது பதில்.

Legalize betting and tax the income.


"IPL is the tournament in which the rest of the teams compete among themselves to gain a slot in the final match against Chennai Super Kings." என்று இரண்டாண்டுகளுக்கு முன்னர் எனது நண்பர் ஒருவர் விளையாட்டாக குறிப்பிட்டார். இம்முறையும் அது உண்மையாகிவிடும் போல உள்ளது. சென்ற முறை போல இல்லாமல் இம்முறை தடுமாற்றம் ஏதும் இல்லாமல் சென்னை அரையிறுதிக்கு தேர்வாகி இருக்கிறது. இம்முறை ராஜஸ்தான் ஜெயிக்க வேண்டும் என்று நான் ஆசை படுகிறேன். டிராவிட் கோப்பையை வெல்வது எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். நீங்கள் யாராவது ஷில்பா ஷெட்டியினால் தான் நான் ராஜஸ்தானை சப்போர்ட் செய்கிறேன் என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.


இப்போதெல்லாம் அம்மாவின் அரசியல் சந்தானத்தின் காமெடியை போல இருக்கிறது. ஒரு சில படங்களில் அபாரமாக இருக்கிறது, ஒரு சில படங்களில் செல்ஃப் எடுக்க மறுக்கிறது. அம்மா உணவகம் சூப்பராக இருப்பதாக நான் இந்தியா சென்ற போது ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் சொன்னார்கள். ஒரு டீ 8 ரூபாய் விற்கிற காலத்தில் 10 ரூபாய்க்குள் காலை உணவினை முடித்துக் கொள்ளலாம் என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஸ்ரீரங்கத்தில் அடுத்த உணவகம் தொடங்கப்பட இருக்கிறது என்று திருச்சியில் உள்ளவர்களும் அதனை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அதே போல தொடக்கப்பள்ளியில் ஆங்கில வழி கல்வியும் கூடுதலாக கிடைக்கும் என்பது மகிழ்ச்சியே. ஆனால் பெயரளவில் ஆங்கில வழி கல்வி என்று இல்லாமல், ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளித்தால் அனைவரும் பயனடைவார்கள். இப்படி நல்லதாக ஒன்றிரண்டு இருக்க, நூறு கோடி ரூபாய் செலவில் தமிழண்ணைக்கு சிலை என்று காமெடி பீஸாக சில நேரம் மாறி விடுகிறார். கலைஞருக்கு வள்ளுவர் கோட்டம், திருவள்ளுவர் சிலை என்று இருப்பது போல இவருக்கும் ஏதாவது தேவை படுகிறதோ என்னமோ. கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போல அரசு பணத்தை எடுத்து செலவழிக்கிறார்.


இம்முறை இந்தியா சென்ற போது வழக்கம் போலவே, எங்கள் குல தெய்வமான குமரமலை முருகன் கோவிலுக்கு சென்றேன். கோவில் புதுக்கோட்டையிலிருந்து விராலி மலை செல்லும் வழியில் இருக்கிறது. இம்முறை சென்ற போது சித்தன்னவாசலுக்கு அருகே வெக்காளியம்மனுக்கும், வேலாங்கன்னிக்கும் கடும் போட்டியே நடந்தது. புதிதாக ஏதோ மதக் கலவரம் என்று நினைத்து விடாதீர்கள். நான் சொல்வது இரண்டு இஞ்சினியரிங் கல்லூரிகளுக்கிடையே நடக்கும் விளம்பர போட்டி. சாலை முழுவதும் தட்டிகள். சித்தன்னவாசலை கடந்து திருச்சி-மதுரை சாலையை தொடும் போது, மஹாத்மா காந்திக்கும் அண்ணை தெரசாவுக்கும் போட்டி. "புற்றீசல் போல" என்று சொல்லுவார்கள். ஆனால் இது அதை விட மோசமாக இருக்கிறது. எனது நண்பர் SRM பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருக்கிறார். அவர் சொன்ன தகவலின் படி நான்கு ஆண்டு இஞ்சினியரிங் படிப்புக்கு 12 லட்சத்திலிருந்து 25 லட்சம் ரூபாய் வரை செலவாகிறது என்பது கவலையளிக்கும் விஷயமாக இருக்கிறது.


நல்ல தமிழ் படம் பார்த்து நெடு நாட்களாகி விட்டது போல ஒரு தோற்றம். பரதேசிக்கு பின்னர் எதுவும் பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். அப்படியே ஏதாவது பார்த்திருந்தாலும் எனது நினைவில் இல்லை. சூது கவ்வும், நேரம் இரண்டும் பார்க்க ஆவல். ஆனால் இங்கே வெளியிடப்படவில்லை. தொலைக்காட்சியில் ஒளிபரப்பும் வரையோ அல்லது DVD வரும் வரையோ காத்திருக்க வேண்டும். இப்போது ஆவலுடன் காத்திருப்பது தலைவா மற்றும் சிங்கம் 2 படங்களுக்கு தான்.


ஒரு படத்தின் பெயர் சொன்னால் அப்படத்தின் தொடர்புடைய ஏதாவது ஒன்று, அது நல்லதோ கெட்டதோ, சட்டென்று நமக்கு நியாபகம் வரும். அது அப்படம் பார்த்த போது நடந்த நிகழ்வாக இருக்கலாம் அல்லது அப்படத்தின் காட்சிகளாக இருக்கலாம். அதுபோல ஆண் பாவம் என்றால் எனக்கு உடனே நியாபகம் வருவது இளையராஜாவின் புல்லாங்குழல் இசை. காதுகளில் உடனே ஒலிக்க தொடங்கும். நெட்டில் தேடியபோது கிடைத்தது. உங்கள் காதுகளுக்கு விருந்து.


Friday, May 10, 2013

சற்றே அவசரமான ஒரு இந்திய பயணம்

பதிவெழுதி இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிறது. தனி மடலிலும், பின்னூட்டத்திலும் ஏன் தாமதம் என்று நண்பர்கள் விசாரிக்கிறார்கள். வேறு ஒன்றும் இல்லை. சில தனிப்பட்ட காரணங்களில் சற்று பிஸியாக இருந்தேன். இடைப்பட்ட காலத்தில் பதிவும் அவ்வளவாக படிக்க இயலவில்லை.

கல்லூரியில் எனது நெருங்கிய நண்பன் இவன். நான்கு ஆண்டுகளாக என்னுடன் படித்தவன். ஒரே வகுப்பு, ஒரே பெஞ்ச். லண்டனில் இருந்தான். துரதிருஷ்டவசமாக விவாகரத்து செய்து விடும் சூழ்நிலை. இந்தியா திரும்பி விட்டான். அவனது மனைவியும் (முன்னாள்) எனது நெருங்கிய நண்பியே. கல்லூரியில் இருவரும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்.

யார் மீது தவறு யார் செய்தது சரி என்றெல்லாம் எனக்கு தெரியாது, நான் இருவரிடமும் என்ன நடந்தது என்று கடைசி வரை கேட்கவே இல்லை. எட்டு வருட அமெரிக்கா வாசம் எனக்கு முக்கியமாக கற்றுக் கொடுத்தது அடுத்தவரின் தனிப்பட்ட விஷயங்களை கேட்பது அநாகரீகம் என்பதே. ஆனாலும் அவன் தனியாக இந்தியாவில் இருந்தது எனக்கு சற்று கஷ்டமாக இருந்தது. அதனால் இந்தியா சென்று அவனுடன் சில நாட்களை செலவிட விரும்பினேன்.

திடீர் என்று முடிவு செய்து ஒரு வார பயணம் மேற்கொண்டேன். ப்ரணவ் இல்லாமல் தனியாக பயணம் செய்வது ஒரு மிகப் பெரிய லக்ஷுரி. விமானம் ஏறியதுமே ஒரு ரெண்டு லார்ஜ் விட்டுக் கொண்டு தூங்கி விடலாம். பெரிய மூட்டை முடிச்சுக்களுடன் செல்ல தேவை இல்லை. அவனுக்கு இந்தியாவில் சாப்பாடு ஒத்துக் கொள்ளுமா, வெதர் ஒத்துக் கொள்ளுமா என்ற கவலை எல்லாம் இல்லை.

எப்போதும் லுஃப்தான்ஸாவில் தான் பயணம் செய்வேன். இம்முறை கத்தாரில். லுஃப்தன்ஸாவை விட நன்றாகவே இருந்தது. சுமார் 300 படங்களுக்கு மேல் லைப்ரரியில் இருந்தன. பல தொலைக்காட்சி தொடர்கள் வேறு. 20 மணி நேர பயணம் போனதே தெரியவில்லை. போகும் போது ஆர்கோவும், ஸ்கை ஃபாலும் பார்த்தேன்.

ஒரு சூப்பர் ஃபிகர் பக்கத்தில் வந்து அமர்ந்தது. பேசலாம் என்று நினைக்கும் போது டமரூகம் படத்தை பார்க்க தொடங்கியது. யப்பா சாமி தப்பித்தேன் என்று நினைத்து வேறு பக்கம் திரும்பி கொண்டேன்.

சென்னை விமான நிலையத்தை புதிதாக கட்டிக் கொண்டு இருக்கிறார்கள். நன்றாக இருந்தது. இறங்கியதும் நண்பன் ஒருவன் வந்து என்னை அழைத்து சென்றான். முதல் நாள் அவனது வீட்டில் என்னை அவனது படுக்கை அறையில் படுக்க வைத்து விட்டு அவர்கள் தங்கள் ஒரு வயது குழந்தையுடன் தரையில் படுத்துக் கொண்டார்கள். மிகவும் கஷ்டமாக இருந்தது. தங்கமணியிடம் சொல்லி அடுத்த நாள் ரெசிடென்சியில் அறை ஏற்பாடு செய்து விட்டேன். அதில் அவனுக்கு சிறிது கோபமும் கூட.

அடுத்த ஒரு வார காலத்துக்கு சென்னையின் சுமார் 20, 25 பப்களை நாங்கள் நண்பர்கள் அனைவரும் சுற்றி சுற்றி வந்தோம். ஒரு சில பப்களில் ஒரு லார்ஜ் 2000 ருபாய் வரை விற்கிறார்கள். கூட்டம் அம்முகிறது. எல்லாம் பெத்தவன் காசு என்று நினைத்துக் கொண்டோம்.

நடுவில் இரண்டு நாட்கள் திருச்சி சென்று அப்பாவையும் அம்மாவையும் பார்த்து விட்டு வந்தேன். அவர்களிடம் நண்பனின் விவாகரத்தை பற்றி சொல்ல வில்லை. சொன்னால் மிகவும் வருத்தப் படுவார்கள். திருச்சி செல்லும் போது முதலில் ஸ்பைஸ் ஜெட்டில் தான் பதிவு செய்திருந்தான். ஆனால் கடைசி நேரத்தில் தான் விமானம் தாமதமாக புறப்படுகிறது என்று சொன்னார்கள். உடனே ஜெட் ஏர்வேஸில் பதிவை மாற்றி விட்டேன். அப்போது ஸ்பைஸ் ஜெட் நிறுவன அலுவலகத்தில் ஒரு பெரிசு இந்துவில் எழுதுவேன் சந்துவில் எழுதுவேன் என்று கத்திக் கொண்டிருந்தார். அந்த பெண்களும் அவருக்கு பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கு பார்க்கவே பாவமாக இருந்தது.

விமானம் ரத்தானால் இவர்கள் என்ன செய்வார்கள். அடிக்கும் வெய்யிலில் பத்துக்கு பத்து அறையில் தடியான கோட் சூட் போட்டுக் கொண்டு குளிர் சாதன வசதி இல்லாமல் அவர்கள் எல்லாம் வேலைக்கு வருவதே பெரிய சேவை. இதில் இப்படி பயணிகளின் டார்ச்சர் வேறு. திருச்சி விமான நிலையம் முன்னர் பார்த்ததற்கு இப்போது மிகவும் நன்றாக இருக்கிறது. நல்ல வசதியாக மாற்றி விட்டார்கள். திருச்சியில் 8 மணிநேரம் மின்சாரம் ரத்தாகிறது. ஃபேன் போட்டால் அணல் காற்று அடிக்கிறது. நல்ல வேளை குழந்தையை அழைத்து செல்லவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.

ராமதாஸ் கைது பரபரப்பாக இருந்தது திருச்சியில். திருச்சி சிறையின் வழியாகத்தான் விமான நிலையத்துக்கு செல்ல வேண்டும் என்பதால் வாகனங்களை கடுமையாக சோதித்து கொண்டிருந்தார்கள். மக்கள் தொலைக்காட்சியில் கொங்கு வேளாள கட்சியை சேர்ந்தவர் ஒருவர் வந்து உயர் சாதி பெண்களை தலித்துகள் மயக்குவது குறித்து காட்டமாக கருத்து தெரிவித்துக் கொண்டிருந்தார். "உயர் சாதி பெண்கள்", "உயர் குல பெண்கள்", "உயர் வகுப்பு பெண்கள்" என்று நான் பார்த்த 15 நிமிடங்களில் 20 முறைக்கு மேல் சொல்லி இருப்பார். அதற்கு மேல் என்னால் பார்க்க இயலவில்லை. இட ஒதுக்கீடு தேவைப் படும் போது நாங்கள் ஒதுக்கப்பட்டவர்கள், மற்ற நேரத்தில் நாங்கள் உயர் வகுப்பினர். We are the biggest hypocrites.

ஒரு வார பயணம் முடிந்து சென்ற வாரம் அமெரிக்கா வந்து விட்டேன். கடுமையாக ஊர் சுற்றியதில் உடல் சோர்வு மிக அதிகமாக இருக்கிறது. சிறிது ஓய்வெடுத்துக் கொண்ட பிறகு உங்களை மீண்டும் வந்து டார்ச்சர் செய்கிறேன். This post is only to say I am alive, hale and healthy.