Saturday, March 16, 2013

பரதேசி

இது போன்ற படங்களுக்கெல்லாம் விமர்சனம் எழுதும் யோக்கிதை எனக்கு இல்லாததால் கீழே உள்ள படத்தையே விமர்சனமாக படைக்கிறேன்.

Thursday, March 14, 2013

பிரபாகர்

பிரபாகர். இவர் எனக்கு அறிமுகமானது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான். எனது மனைவியின் சகோதரியின் கணவர் வழியில் தூரத்து உறவு. மும்பையில் தான் அவரது வீடு. மனைவி, அழகான இரண்டு மகள்கள். மூத்த மகள் கல்லூரி மூன்றாம் ஆண்டும், இளைய மகள் முதல் ஆண்டும் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி ஒரு உறவினர் இருக்கிறார் என்பதே எனக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை தெரியாது. 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா சென்ற போது ஷீரடி செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். ப்ரணவ் அப்போது 5 மாத குழந்தை. மும்பை சென்று அங்கிருந்து ஷீரடி செல்ல வேண்டும் என்பதாலும், எனது ஹிந்தி ஏக் காவுமே ஏக் கிஸான் ரகு தாத்தா ஹிந்தி என்பதாலும், மும்பையில் யாராவது நண்பர்களோ இல்லை உறவினர்களோ இருக்கிறார்களா? என்று வீட்டு பெரியவர்களிடம் கேட்டதில் கிடைத்தவர் தான் பிரபாகர்.

எனக்கு இம்மாதிரி விஷயங்களுக்காக முன் பின் தெரியாதவர்கள் வீட்டுக்கு சென்று தங்குவது என்பது துளியும் பிடிக்காத விஷயம். அதனால் பயணம் முழுவதும் லஜ்ஜையாகவே இருந்தது. ஆனால் அதெல்லாம் அவரையும் அவரது குடும்பத்தினரையும் பார்க்கும் வரை மட்டுமே. பார்த்த உடனே பல நாட்கள் பழகியது போல உணர்வினை தந்தார்கள் அவர்கள்.

பணத்தை தண்ணீராக செலவழிப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதை உண்மையில் பார்த்தது அவரிடம் தான். அவர் இருக்கும் இடத்தில் மற்றவர்கள் பர்ஸை வெளியில் எடுப்பதே இயலாது. அவரது உறவினர்களுக்கு அவர் ஒரு காட் ஃபாதர் போல இருப்பதை அங்கு உணர முடிந்தது. பலருக்கும் பல விதமான உதவிகளை அவர் செய்து வருவதும் தெரிந்தது. இதெல்லாம் அவர் மீதான மதிப்பை கூட்டியது. அருமையாக வயலின் வாசிப்பார். ஒரு முறை "என் இனிய பொன் நிலா" பாடலின் தொடக்கத்தில் வரும் கிடாரை கூட தனது விரல்களாலேயே வயலின் கொண்டு அருமையாக வாசித்து காட்டினார். அவரது மனைவிக்கும், பெண்களுக்கும் ப்ரணவ் மீது கொள்ளை ஆசை. ப்ரணவ் சாப்பிட அதிகம் படுத்துவான் என்பதால் எங்கே வெளியில் சென்றாலும் எவ்வளவு வேலை இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது ஃபோன் செய்து அவன் சாப்பிட்டானா தூங்கினானா என்று கேட்டுக் கொண்டே இருப்பார் அவரது மனைவி.

சென்ற ஆண்டு இந்தியா சென்ற போது அவரை பார்க்க வேண்டும், அவர் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காகவே எப்போதும் சென்னை செல்லும் நாங்கள், அந்த முறை மும்பை வழியாக இந்தியா சென்றோம். அவரும் நாங்கள் வருகிறோம் என்பதாலேயே அவரது மகள்களின் நாட்டிய அரங்கேற்றத்தை நாங்கள் மும்பையில் இருக்கும் போது நடத்தினார். 10 நாட்களுக்கு மேல் மும்பையிலும், கோவாவிலும் அவருடன் நேரத்தை செலவழித்தோம். நாங்கள் கிளம்பும் போது அவர் குடும்பத்தினருடன் ஒரு முறை அமெரிக்கா வருவதாக உறுதி கூறினார்.

ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? இறைவன் வழி விளங்கா புதிர் நிலை அல்லவா? மூன்று நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு ஒரு நாட்டிய விழாவிற்காக குடும்பத்துடன் வந்தவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார். செய்தி கேட்டதில் இருந்து பித்து பிடித்தது போல இருக்கிறது. 41 வயது சாகும் வயதா? தனது உறவினர் வீட்டு பெண்களுக்கெல்லாம் தனது செலவில் திருமணம் செய்து மகிழ்ந்தவர், தனது இரு பெண்கள படித்து முடிப்பதையும், வேலைக்கு செல்வதையும், திருமணம் முடித்து மகிழ்வுடன் வாழ்வதையும் பார்க்காமலே சென்று விட்டார். விஷயம் தெரிந்த உடனே கவுதமும், அபியும் இந்தியா சென்று விட்டார்கள். நேற்று எல்லாம் முடிந்து விட்டது.

பொன்னியின் செல்வன் கதையில் ஆதித்த கரிகாலன் இளமையில் இறப்பவர்களுக்கு முதுமையே கிடையாது என்பார். அது போலவே பிரபாகரின் முகத்தில் சுருக்கம் இனி வரப்போவதில்லை, தலை முடி இனி நரைக்க போவதில்லை, உடல் தளர்ந்து விடப்போவதில்லை, இப்படி இன்னும் பல இல்லைகள். பிரபாகரை தெரிந்தவர்களுக்கு அவர்களது நினைவில் இனி இளமையான பிரபாகர் மட்டுமே இருப்பார். RIP Prabhakar. நீங்கள் இது வரை செய்த புண்ணியம் உங்கள் குடும்பத்தினரை இனி பாதுகாக்கும்.

Sunday, March 03, 2013

விஜயகாந்த் என்றால் அவ்வளவு மட்டமா?

சென்ற மாதம் விஷ்வரூபம் குறித்து எழுதிய விமர்சனப் பதிவுக்கு என்னை திட்டி தினமும் பல பின்னூட்டங்கள் வருகின்றன. தனிப்பட்ட தாக்குதல்கள் அதிகம் இருப்பதால் அவற்றை வெளியிட விரும்புவதில்லை. திட்டுபவர்கள் என்னை மட்டும் திட்டினால் ஒரு பிரச்சனையும் இல்லை. எனது குடும்பத்தினரையும் சேர்த்து திட்டுவதனால் தான் வெளியிட முடிவதில்லை.

ஒரு திரைப்படத்தை விமர்சித்தால் இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம் வருகிறது என்பது மட்டும் எனக்கு விளங்கவே இல்லை. ஒரு கலைஞனை விமர்சிப்பது என்பது வேறு, அவனது கலை படைப்பை விமர்சிப்பது என்பது வேறு. ஆனால் நம் நாட்டில் தான் இரண்டையும் பிரித்து பார்க்காமல் சேர்த்து பார்த்து குழம்புகிறார்கள், நம்மையும் குழப்புகிறார்கள். ஒரு கலைஞனை பிடிக்கவில்லை என்றால் அவனது படைப்பு எவ்வளவு நன்றாக இருந்தாலும் அதை தெருவில் வீசி 'குப்பை' என்று கூறுகிறார்கள், அதே நேரத்தில் நமக்கு பிடித்த கலைஞனின் படைப்பு உண்மையிலேயே குப்பையாக இருந்தாலும் கோபுரத்தின் உச்சியில் வைத்து 'காவியம்' என்று போற்றுகிறார்கள். அவர்களின் இந்த லூசுத்தனத்தை அவர்களுடனேயே வைத்துக் கொண்டால் ஒன்றும் பாதகம் இல்லை. ஆனால் அதையே மற்றவர்களும் செய்ய வேண்டும் என்ற அவர்களின் எதிர்பார்ப்பே எரிச்சலை ஏற்படுத்துகிறது.

உலகில் மற்ற நுகர்வு பொருட்களை விமர்சிப்பதை விட ஒரு படி அதிகமாகவே திரைப் படங்களை விமர்சிக்க நுகர்வோனுக்கு உரிமை உண்டு. ஏனென்றால் திரைப்படங்களை தான் ஒருவன் பார்ப்பதற்கு முன்னரே காசு கொடுத்து வாங்குகிறான். மற்ற பெரும்பான்மையான நுகர்வு பொருட்கள் ஒரு முறையாவது பார்த்த பிறகே வாங்கப்படுகின்றன. சரி அதையெல்லாம் விட்டு விடுங்கள். பதிவு அதை பற்றியது இல்லை.

நேற்று வந்த ஒரு பின்னூட்டத்தில் "உங்களுக்குள்ள மழுங்கல் மூளைகளுக்கெல்லாம் விஜயகாந்த் படங்கள்தான் லாயக்கு!" என்று ஒரு அறிவு ஜீவி கருத்து தெரிவித்திருந்தார். ஒருவர் என்னை முட்டாள் என்று கருதுவதில் எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை, அதே போல ஒருவர் என்னை அறிவாளி என்று கருதுவதிலும் எனக்கு ஒரு சகாயமும் இல்லை. அதனால் பதிவு அவரது என்னை பற்றிய கருத்தை பற்றியதும் அல்ல. ஆனால் விஜயகாந்த் படங்கள் எல்லாம் மழுங்கல் மூளை உள்ளவர்களுக்கு தான் லாயக்கு என்ற கருத்து தான் என்னை இப்பதிவெழுத தூண்டியது.

அறிவு ஜீவிகள் என்று தங்களை தாங்களே கருதுபவர்கள் தேவையே இல்லாமல் தங்களை ஒரு வரையறைக்குட்படுத்திக் கொள்கிறார்கள். உதாரணத்துக்கு தமிழ் சினி ரசிகர்களை எடுத்துக் கொண்டால், கமலை, மணிரத்னத்தை, சுஜாதாவை சிலாகிப்பவர்கள் அறிவு ஜீவிகள் என்றும், விஜயகாந்தை, அர்ஜுனை, சரத் குமாரை ரசிப்பவர்கள் குறைந்த ரசனை உடையவர்கள் என்றும் கருதுவது; அதே போல தமிழ் புத்தக வாசிப்பில் கி வா ஜவையும், லா ச ராவையும், ஜெயகாந்தனையும், ஜானகிராமனையும், பிரபஞ்சனையும், நீல. பத்மநாபனையும் படிப்பவர்கள் உயர்ந்த ரசனை உடையவர்கள் என்றும், பாக்கெட் நாவல் வாங்கி ராஜேஷ் குமாரை படிப்பவர்கள் குறைந்த ரசனை உடையவர்கள் என்றும் கருதுவது எல்லாம் அவர்களின் பொது புத்தியின் வெளிப்பாடே. பொது புத்தியெல்லாம் சரியாகவே இருக்க வேண்டும் என்பது ஒன்றும் அவசியம் இல்லை. வெள்ளையா இருக்கிறவன் பொய் பேச மாட்டான் என்று கருதுவதும் கூட ஒருவகை பொது புத்தி தான்.

பொதுவாகவே இந்த ஆதிக்க உலகில் வாழும் மக்களுக்கு ஒரு படி நிலை தேவைப் படுகிறது. தங்கள் மொழி மேல், மற்ற மொழிகள் எல்லாம் கீழ்; தங்கள் கலாச்சாரம் மேல், மற்ற கலாச்சாரங்கள் எல்லாம் கீழ்; தங்கள் மதம் மேல், மற்ற மதங்கள் எல்லாம் கீழ்; தங்கள் சாதி மேல், மற்றவர் சாதிகள் எல்லாம் கீழ்; ஆண்கள் மேல், பெண்கள் கீழ்; பெரியவர்கள் மேல், குழந்தைகள் கீழ்; படித்தவர்கள் மேல், படிக்காதவர்கள் கீழ்; சிகப்பாக இருப்பவர்கள் மேல், கருப்பாக இருப்பவர்கள் கீழ்; பணக்காரர்கள் மேல், ஏழைகள் கீழ்; இது போலத்தான் தங்கள் ரசனை மேல், மற்றவர் ரசனை கீழ் என்ற படி நிலையும்.

வகுப்பில் எல்லோரும் முதல் ரேங்க் வாங்கினால் முதல் ரேங்க் வாங்குபவன் எப்படி மற்றவர்களிடம் தனது சாதனையை சொல்லி பீற்றிக் கொள்ள முடியும்? எல்லோரிடமும் BMW இருந்தால் எப்படி BMW வைத்திருப்பவன் பேரூந்தின் படியில் தொத்திக் கொண்டு அலுவலுக்கு செல்பவன் முன்பு பந்தா விட முடியும்? அதனாலேயே இந்த ஆதிக்க படி நிலையின் போதையில் வாழ்பவர்களுக்கு தாங்கள் ஆதிக்கம் செலுத்த குறைந்த ரசனை உள்ளவர்கள் தொடர்ந்து தேவை படுகிறார்கள். குறைந்த ரசனை உடையவர்கள் இல்லை என்றால், இவர்கள் யாருடன் தங்களை ஒப்பிட்டு தங்களின் அறிவு ஜீவித்தனத்தை காட்டிக் கொள்ள முடியும்?

Ayn Rand எழுதிய Atlas Shrugged நாவலில் ஒரு கதாபாத்திரம் இப்படி சொல்லும். அறிவு ஜீவிகள் மற்றவர்களின் ரசனையை மட்டம் தட்டும் போது எனக்கு இது தான் நினைவுக்கு வந்தது.

"I like to think of fire held in a man's hand. Fire, a dangerous force, tamed at his fingertips. I often wonder about the hours when a man sits alone, watching the smoke of a cigarette, thinking. I wonder what great things have come from such hours. When a man thinks, there is a spot of fire alive in his mind–and it is proper that he should have the burning point of a cigarette as his one expression."

நெருப்பை உங்கள் விரல் இடுக்குகளில் வைத்து உள் இழுப்பதனால் நீங்கள் அதனை வெற்றி கொண்டீர்கள் என்று பொருள் இல்லை. அப்படி உங்களை நம்ப வைத்து நெருப்பு உங்களை மெதுவாக கொஞ்சம் கொஞ்சமாக வெற்றி கொள்கிறது அல்லவா, அது தான் நெருப்பின் வெற்றி.

அறிவு ஜீவிகளே! இந்தியாவில் பெரும்பான்மையானவர்கள் முன் வரிசை ரசிகர்கள் தான். அவர்கள் தினந்தோறும் சந்திக்கும் சமூக, பொருளாதார பிரச்சனைகள் ஏராளம் ஏராளம். அவர்களை தங்கள் பிரச்சனைகளை எல்லாம் ஒரு மூன்று மணி நேரம் மறக்க செய்து மகிழ்விக்கும் ஒரு கலைஞனை நீங்கள் மழுங்கல் மூளை உள்ளவர்களுடன் தயங்காமல் நாள் தவறாமல் ஒப்பிட்டுக் கொண்டே இருங்கள். தயவு செய்து அதை நிறுத்தி விடாதீர்கள். ஏனென்றால், முன் வரிசை ரசிகர்களான எங்களுக்கும் தராதரத்தில் ஒரு படி நிலை தேவைப்படுகிறது.