Thursday, March 14, 2013


பிரபாகர்

பிரபாகர். இவர் எனக்கு அறிமுகமானது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான். எனது மனைவியின் சகோதரியின் கணவர் வழியில் தூரத்து உறவு. மும்பையில் தான் அவரது வீடு. மனைவி, அழகான இரண்டு மகள்கள். மூத்த மகள் கல்லூரி மூன்றாம் ஆண்டும், இளைய மகள் முதல் ஆண்டும் படித்துக் கொண்டிருக்கின்றனர்.

இப்படி ஒரு உறவினர் இருக்கிறார் என்பதே எனக்கு இரண்டாண்டுகளுக்கு முன்பு வரை தெரியாது. 2011 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா சென்ற போது ஷீரடி செல்ல வேண்டும் என்று முடிவு செய்தோம். ப்ரணவ் அப்போது 5 மாத குழந்தை. மும்பை சென்று அங்கிருந்து ஷீரடி செல்ல வேண்டும் என்பதாலும், எனது ஹிந்தி ஏக் காவுமே ஏக் கிஸான் ரகு தாத்தா ஹிந்தி என்பதாலும், மும்பையில் யாராவது நண்பர்களோ இல்லை உறவினர்களோ இருக்கிறார்களா? என்று வீட்டு பெரியவர்களிடம் கேட்டதில் கிடைத்தவர் தான் பிரபாகர்.

எனக்கு இம்மாதிரி விஷயங்களுக்காக முன் பின் தெரியாதவர்கள் வீட்டுக்கு சென்று தங்குவது என்பது துளியும் பிடிக்காத விஷயம். அதனால் பயணம் முழுவதும் லஜ்ஜையாகவே இருந்தது. ஆனால் அதெல்லாம் அவரையும் அவரது குடும்பத்தினரையும் பார்க்கும் வரை மட்டுமே. பார்த்த உடனே பல நாட்கள் பழகியது போல உணர்வினை தந்தார்கள் அவர்கள்.

பணத்தை தண்ணீராக செலவழிப்பார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன். அதை உண்மையில் பார்த்தது அவரிடம் தான். அவர் இருக்கும் இடத்தில் மற்றவர்கள் பர்ஸை வெளியில் எடுப்பதே இயலாது. அவரது உறவினர்களுக்கு அவர் ஒரு காட் ஃபாதர் போல இருப்பதை அங்கு உணர முடிந்தது. பலருக்கும் பல விதமான உதவிகளை அவர் செய்து வருவதும் தெரிந்தது. இதெல்லாம் அவர் மீதான மதிப்பை கூட்டியது. அருமையாக வயலின் வாசிப்பார். ஒரு முறை "என் இனிய பொன் நிலா" பாடலின் தொடக்கத்தில் வரும் கிடாரை கூட தனது விரல்களாலேயே வயலின் கொண்டு அருமையாக வாசித்து காட்டினார். அவரது மனைவிக்கும், பெண்களுக்கும் ப்ரணவ் மீது கொள்ளை ஆசை. ப்ரணவ் சாப்பிட அதிகம் படுத்துவான் என்பதால் எங்கே வெளியில் சென்றாலும் எவ்வளவு வேலை இருந்தாலும் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது ஃபோன் செய்து அவன் சாப்பிட்டானா தூங்கினானா என்று கேட்டுக் கொண்டே இருப்பார் அவரது மனைவி.

சென்ற ஆண்டு இந்தியா சென்ற போது அவரை பார்க்க வேண்டும், அவர் குடும்பத்தினருடன் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காகவே எப்போதும் சென்னை செல்லும் நாங்கள், அந்த முறை மும்பை வழியாக இந்தியா சென்றோம். அவரும் நாங்கள் வருகிறோம் என்பதாலேயே அவரது மகள்களின் நாட்டிய அரங்கேற்றத்தை நாங்கள் மும்பையில் இருக்கும் போது நடத்தினார். 10 நாட்களுக்கு மேல் மும்பையிலும், கோவாவிலும் அவருடன் நேரத்தை செலவழித்தோம். நாங்கள் கிளம்பும் போது அவர் குடும்பத்தினருடன் ஒரு முறை அமெரிக்கா வருவதாக உறுதி கூறினார்.

ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? இறைவன் வழி விளங்கா புதிர் நிலை அல்லவா? மூன்று நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு ஒரு நாட்டிய விழாவிற்காக குடும்பத்துடன் வந்தவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார். செய்தி கேட்டதில் இருந்து பித்து பிடித்தது போல இருக்கிறது. 41 வயது சாகும் வயதா? தனது உறவினர் வீட்டு பெண்களுக்கெல்லாம் தனது செலவில் திருமணம் செய்து மகிழ்ந்தவர், தனது இரு பெண்கள படித்து முடிப்பதையும், வேலைக்கு செல்வதையும், திருமணம் முடித்து மகிழ்வுடன் வாழ்வதையும் பார்க்காமலே சென்று விட்டார். விஷயம் தெரிந்த உடனே கவுதமும், அபியும் இந்தியா சென்று விட்டார்கள். நேற்று எல்லாம் முடிந்து விட்டது.

பொன்னியின் செல்வன் கதையில் ஆதித்த கரிகாலன் இளமையில் இறப்பவர்களுக்கு முதுமையே கிடையாது என்பார். அது போலவே பிரபாகரின் முகத்தில் சுருக்கம் இனி வரப்போவதில்லை, தலை முடி இனி நரைக்க போவதில்லை, உடல் தளர்ந்து விடப்போவதில்லை, இப்படி இன்னும் பல இல்லைகள். பிரபாகரை தெரிந்தவர்களுக்கு அவர்களது நினைவில் இனி இளமையான பிரபாகர் மட்டுமே இருப்பார். RIP Prabhakar. நீங்கள் இது வரை செய்த புண்ணியம் உங்கள் குடும்பத்தினரை இனி பாதுகாக்கும்.

7 Comments:

வருண் said...

***ஆனால் நாம் நினைப்பதெல்லாம் நடந்து விடுகிறதா என்ன? இறைவன் வழி விளங்கா புதிர் நிலை அல்லவா? மூன்று நாட்களுக்கு முன்பு திருச்சிக்கு ஒரு நாட்டிய விழாவிற்காக குடும்பத்துடன் வந்தவர் மாரடைப்பால் உயிரிழந்து விட்டார். செய்தி கேட்டதில் இருந்து பித்து பிடித்தது போல இருக்கிறது. 41 வயது சாகும் வயதா? ***

I hear too many cardiac arrest cases in the past 3 months or so. All are deaths! :(

Never think that you are healthy. Do physical check up every year. If there is any abnormality in your lipid profile or BP, do take it seriously and "treat it" and keep it under control. Do avoid alcohol and smoking if you have any abnormalities in your lipid profile. Of course physical exercise would help. But, just because you are working out regularly, it will not make you as a healthiest individual. Check it out with Doctor and watch your health.

Avargal Unmaigal said...

எல்லோரையும் எல்லாவற்றையும் கவனித்து உதவி செய்த உங்கள் உறவினர் தன் உடல்நிலையை கவனிக்க தவறி விட்டார் போல....உங்கள் பதிவை படித்தும் மனம் வருந்துகிறது அவரது ஆத்மா சாந்தி அடைய வேண்டும் அவர்களின் குடும்பமும் நீங்களும் இந்த மனத் துயரத்தில் இருந்து விடுபட இறைவந்தான் உங்களுகெல்லாம் பலத்தை தரவேண்டும்

நீங்க எழுதிய முறையா அல்லது ஒரு நல்லவர் இளம் வயதில் இறந்துவிட்டார் என்பதாலோ என்னவோ என் மனது மிகவும் வருந்துகிறது.

அஜீம்பாஷா said...

பிரபாகர் அவர்களின் மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். மனதை தேற்றி கொண்டு அவர் குடும்பத்துக்கு ஆதரவாக இருக்க முயற்சியுங்கள்.

துளசி கோபால் said...

வருந்துகின்றேன்:(

Arunkumar said...

Very sad to hear it :-(

Narration of your relative Prabhakar matches word by word for my "periappa". He was also a loving person, caring for others, very helpful, always willing to spend money for others if that would help and a very very cheerful human being i have seen and been with. He died of heart attack when i was young and longing/hoping for spending more and more time with him.. Your post made me remember my periappa today and its tough to hide my tears...

Rest in peace Mr Prabhakar. Your good deeds will lead the way for your family...

Senthil Kumaran said...

வருத்தமான செய்தி. RIP Mr. Prabhakar.

வெடிகுண்டு முருகேசன் said...

அவரது குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.