Friday, June 22, 2012

அஜினோமோட்டோ என்னும் அரக்கன்

டிவியில் தமன்னா வந்து "ஒரே ஸ்பூன் அஜினோமோட்டோ; குழந்தை சாப்பாடு வேண்டாம்னு சொல்லவே மாட்டா" என்று ஏதாவது உளறுவதை பார்த்து மாதா மாதம் மளிகை சாமான் லிஸ்டில் மட்டும் இல்லாமல் தினமும் ரசம், சாம்பார், பிரியாணி என்று சகலத்திலும் அஜினோமோட்டோவை சேர்த்து கலந்து கட்டி அடிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான்.

அஜினோமோட்டோ அல்லது சீன உப்பு என்று கூறப்படும் இதன் வேதியல் பெயர் "Mono Sodium Glutamate" ஆகும். இதை MSG என்று அழைப்பார்கள்.  இது ஒரு எக்ஸைடோடாக்ஸின் (excitotoxin) ஆகும். அதன் பொருள் என்னவென்றால் அது மூளையின் செல்களை எக்ஸைட் செய்து அவைகளை கொல்லும். அதனால் மூளை மற்றும் நரம்பியல் பாதிப்புகள் ஏற்படலாம். குழந்தைகளுக்கு பாதிப்புகள் அதிகம் ஏற்படக் கூடும். மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதை உணவில் கலந்து கொடுக்கவே கூடாது.

ஆய்வாளர்கள் இதனை உட்கொள்வதால் Seizures, Brain cell death, Brain damage, Allergies, Headaches, Strokes, Hypoglycemia, Brain Tumors, Chest Pain, Heart Palpitations, Nausea, Vomiting, Wheezing, Asthma போன்ற குறைபாடுகள் ஏற்படக் கூடும் என்று கருதுகிறார்கள். இவ்வளவு ஏன்? ஒரு சிலருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு மரணம் கூட ஏற்படலாம்.



அமெரிக்கா போன்ற நாடுகளில் MSG உபயோகித்து உணவு தயாரித்தால் அதற்கு கடுமையான சட்ட திட்டங்களும், அதனால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நுகர்வோர் பாதுகாப்பும் பெரும் அளவில் இருக்கிறது. அதனால் பெரும்பான்மையான உணவகங்களில் MSG பயன்படுத்துவது இல்லை. "NO MSG" என்று போர்டுகள் தொங்கும் உணவகங்கள் பலவற்றை நீங்கள் இங்கே பார்க்கலாம்.

ஆனால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் பெரும் அளவில் அமல்படுத்தப்படாத இந்தியா போன்ற நாடுகளில் நாம் தான் நம்மை பார்த்துக் கொள்ள வேண்டும். இன்று தமிழகத்தில் பெரும்பாலான உணவகங்களில் அஜினோமோட்டோ சேர்க்கப்படுவதாக தெரிகிறது. பலர் இல்லங்களில் இதை பயன் படுத்துகிறார்கள்.

இதை தயாரிப்பவர்கள் இது இயற்கையிலேயே பல உணவு பொருட்களில் சிறிய அளவில் இருக்கிறது என்று அதன் பயன்பாட்டை நியாயப் படுத்துகிறார்கள். இயற்கையில் கிடைக்கும் எல்லா பொருட்களும் நன்மையானதல்ல. கொக்கைன் கொக்கா இலையிலும், ஓபியம், ஹெராயின் போன்றவை பாப்பி மலரிலும், புகையிலை புகையிலை செடியிலும் இயற்கையாக கிடைக்கும் வஸ்துகள் தான். இயற்கையிலேயே கிடைப்பதால் இவை நன்மையானது என்று ஆகிவிடுமா? அப்படித்தான் MSG யும்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிற்வாகத் துறை (United States Food and Drug Administration) இதனை பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது. தயவு செய்து அதனை படித்து பாருங்கள். அப்படியே இதனை பற்றி கூகுளில் தேடுங்கள்.

http://www.fda.gov/ohrms/dockets/DOCKETS/02n0278/02n-0278-c000162-01-vol10.pdf
 
விழித்துக் கொள்வோம். அஜினோமோட்டோ என்னும் அரக்கனை ஒதுக்கித் தள்ளுவோம்.

Wednesday, June 20, 2012

கவிதை

சென்ற வாரம் தந்தையர் தினத்தை முன்னிட்டு ஆலிவ் கார்டனுக்கு சாப்பிட இரவு சென்றிருந்தோம். சாப்பாடு அருமையாக இருந்தது. அப்பொழுது பேச்சினிடையே அபி தனது தந்தை கவுதம் பற்றி ஒரு சிறிய பாடலை எழுதி இருந்தது தெரிந்தது. அதை அவன் படித்தும் காட்டினான். மிகவும் நன்றாக இருந்தது.

இன்று அவனிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, மாண்டியை பற்றி ஒரு பாடல் எழுதும் படி சொன்னேன். அடுத்த பத்தாவது நிமிடம் வந்தது இந்த பாடல்.

My dog’s name is Monty; he always eats bounty
He is very very cute; but he’s always on mute
He’s really really small and not very tall
He is the best and keeps away pest
This is my song; it isn’t that long
He always licks my toe; and whenever I see him, he makes me glow.

-          Abhi

இப்பொழுது அபியின் வயது 11.

Friday, June 15, 2012

அஞ்சலி!!!



Monday, June 11, 2012

என் மனம் கவர்ந்த டாப் 5 நகைச்சுவை திரைப்படங்கள்

01. ஊட்டி வரை உறவு:

தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களுள் ஒருவர் மறைந்த நடிகர் திரு. டி. எஸ் பாலையா அவர்கள். நகைச்சுவை நடிப்பாகட்டும், குணசித்திர நடிப்பாகட்டும், வில்லத்தனமான நடிப்பாகட்டும் அவரது நடிப்பு அசத்தலாக இருக்கும். இப்படத்தின் முதுகெலும்பே அவர் தான். வாலிப வயதில் எங்கோ அவர் தவறு செய்து விட அதனால் அவர் எல். விஜயலக்ஷ்மிக்கு தந்தையாகிறார். எல். விஜயலக்ஷ்மி தனது தாயாரின் மரணத்திற்கு பிறகு தனது தந்தையை தேடி வருகிறார். அதே நேரத்தில் தனது முறை மாமனிடமிருந்து தப்பி ஓடி வரும் கே. ஆர். விஜயா எல். விஜயலக்ஷ்மியின் பெட்டியையும், கடிதத்தையும் பார்த்து பாலையாவின் வீட்டிற்கு அவரது மகளாக வந்து விடுகிறார். எல். விஜயலக்ஷ்மி தனது தந்தையின் விலாசத்தை தொலைத்து விட்டு தனது காதலன் முத்துராமனின் வீட்டிற்கு சென்று விடுகிறார். உண்மையை அறிந்த பாலையாவின் மூத்த தாரத்தின் மகன் சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயாவை காதலிக்க தொடங்க, பாலையாவோ அவர்களை அண்ணன் தங்கை என்று நினைத்து திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக தவிக்க, பிறகு என்ன? முடிவில் எல்லா முடிச்சிக்களும் அவிழும் வரை ஒரே நகைச்சுவை கொண்டாட்டம் தான். பூ மாலையில் ஓர் மல்லிகை, ராஜ ராஜ ஸ்ரீ, அங்கே மாலை மயக்கம் யாருக்காக, ஹேப்பி இன்று முதல் ஹேப்பி, தேடினேன் வந்தது என்று அனைத்து பாடல்களும் காதுகளுக்கு தேன்.


02. காதலிக்க நேரமில்லை:

இப்படத்தை பற்றி சொல்வதற்கு புதிதாக என்ன இருக்கிறது? தமிழ் சினிமாவின் மாபெரும் சகாப்தம் இயக்கிய படம். அட்டகாசமான பாத்திரங்களின் தேர்வு, நூல் பிடித்தது போல திரைக்கதை, அருமையான பாடல்கள் இப்படத்தில் எதை பாராட்ட?, எதை விட? இதிலும் டி. எஸ். பாலையா தான் நாயகன். பாலையாவின் இளைய மகள் நிர்மலாவை ஏழையான ரவிசந்திரன் டாவடிக்க அவரது மூத்த மகள் காஞ்சனாவை பணக்கார முத்துராமன் லவ்வுகிறார். ஏழைகளை பிடிக்காத பாலையாவை ஏமாற்ற முத்துராமனை தனக்கு அப்பாவாக நடிக்க வைக்கிறார் ரவிசந்திரன். பிறகென்ன? ஒரே குழப்பங்களும், கொண்டாட்டங்களும் தான். பாடல்கள் அனைத்தும் அருமை என்றாலும் அனுபவம் புதுமை, நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா, என்ன பார்வை உந்தன் பார்வை மூன்றும் எனது ஃபேவரிட்.


03. தில்லு முல்லு

Arguably one of the best comic capers of Tamil cinema. இப்படத்தின் சிறப்பே இதில் தலைவர் நடித்திருப்பது தான். மீசை இல்லாத தலைவரை எனக்கு தெரிந்து இப்படத்திலும், ராகவேந்திராவிலும் தான் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். முந்தைய இரு படங்களில் பாலையா என்றால், இப்படத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன். அமோல் பாலேகரின் கோல் மாலில் இல்லாத அந்த சிறுவன் பாத்திரம் இப்படத்தின் சிறப்பு. படத்தின் ஹைலைட் அந்த இன்டெர்வ்யூ ஸீக்வென்ஸ். இப்பொழுதும் எங்கள் நட்பு வட்டாரத்தில் யாராவது எதையாவது சில்லியாக செய்தால், "இதிலென்ன பெருமை? கெட் அவுட்." என்பது யாராவது ஒருத்தரின் வாயிலிருந்தாவது வெளிப்பட்டு விடும்.


04. மைக்கேல் மதன காம ராஜன்

கமலஹாசனின் திரைக்கதை நேர்த்திக்கு அபூர்வ சகோதரர்கள் சாட்சி பத்திரம் என்றால், இப்படம் மணி மகுடம். ஒரே மாதிரி இருக்கும் நான்கு சகோதரர்கள் சிறு வயதில் பெற்றோர்களிடம் இருந்து பிரிந்து விட, அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு சூழ்நிலையில் வளர ஒரு சந்தர்பத்தில் அவர்கள் அனைவரும் ஒரே சூழலில் வரும் வாய்ப்பு வருகிறது. அப்பொழுது நடக்கும் பிசகுகள் தான் படத்தின் கதை.

ஒவ்வொரு கமலாக கதையில் நுழைத்த சுவாரஸியம், பிசகில்லாமல் பிசகு நடக்கும் திரைக்கதை, கதையில் எந்த பாத்திரத்திற்கும் கூடவோ குறைவாகவோ இல்லாத முக்கியத்துவம் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படத்தின் திரைக்கதை தமிழ் சினிமாவில் கால் பதிக்க முயலும் இயக்குனர்களுக்கு பைபிள்.


05. உள்ளத்தை அள்ளித்தா

ஒரு சட்டியில் அந்தாஸ் அப்னா அப்னா, பலே பாண்டியா, சபாஷ் மீனா மூன்றையும் போட்டு ஒரு குலுக்கு குலுக்கி எடுத்து அதில் மணிவண்ணன் மற்றும் கவுண்டமணியின் நக்கல், லொல்லு, நையான்டிகளை சேர்த்து கலக்கினால் உள்ளத்தை அள்ளித்தா. காபி என்ற குற்றசாட்டெல்லாம் எனக்கு கிடையாது. எங்கிருந்து தயாரித்தால் என்ன? தயாரிக்கப்பட்ட பொருள் எப்படி என்று தான் நான் பார்ப்பேன். அந்த முறையில் உள்ளத்தை அள்ளித்தா நிச்சயம் நூற்றுக்கு நூறு மார்க் எடுக்கும். கார்த்திக், மணிவண்ணன், கவுண்டர், செந்தில் என்று எந்த பாத்திரத்திலும் வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க இயலாத நடிப்பு. இரண்டரை மணி நேர நான் ஸ்டாப் கொண்டாட்டம். உள்ளத்தை அள்ளித்தா நிச்சயம் என் உள்ளத்தை கொள்ளை கொண்ட படம்.