Monday, June 11, 2012


என் மனம் கவர்ந்த டாப் 5 நகைச்சுவை திரைப்படங்கள்

01. ஊட்டி வரை உறவு:

தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களுள் ஒருவர் மறைந்த நடிகர் திரு. டி. எஸ் பாலையா அவர்கள். நகைச்சுவை நடிப்பாகட்டும், குணசித்திர நடிப்பாகட்டும், வில்லத்தனமான நடிப்பாகட்டும் அவரது நடிப்பு அசத்தலாக இருக்கும். இப்படத்தின் முதுகெலும்பே அவர் தான். வாலிப வயதில் எங்கோ அவர் தவறு செய்து விட அதனால் அவர் எல். விஜயலக்ஷ்மிக்கு தந்தையாகிறார். எல். விஜயலக்ஷ்மி தனது தாயாரின் மரணத்திற்கு பிறகு தனது தந்தையை தேடி வருகிறார். அதே நேரத்தில் தனது முறை மாமனிடமிருந்து தப்பி ஓடி வரும் கே. ஆர். விஜயா எல். விஜயலக்ஷ்மியின் பெட்டியையும், கடிதத்தையும் பார்த்து பாலையாவின் வீட்டிற்கு அவரது மகளாக வந்து விடுகிறார். எல். விஜயலக்ஷ்மி தனது தந்தையின் விலாசத்தை தொலைத்து விட்டு தனது காதலன் முத்துராமனின் வீட்டிற்கு சென்று விடுகிறார். உண்மையை அறிந்த பாலையாவின் மூத்த தாரத்தின் மகன் சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயாவை காதலிக்க தொடங்க, பாலையாவோ அவர்களை அண்ணன் தங்கை என்று நினைத்து திருடனுக்கு தேள் கொட்டிய கதையாக தவிக்க, பிறகு என்ன? முடிவில் எல்லா முடிச்சிக்களும் அவிழும் வரை ஒரே நகைச்சுவை கொண்டாட்டம் தான். பூ மாலையில் ஓர் மல்லிகை, ராஜ ராஜ ஸ்ரீ, அங்கே மாலை மயக்கம் யாருக்காக, ஹேப்பி இன்று முதல் ஹேப்பி, தேடினேன் வந்தது என்று அனைத்து பாடல்களும் காதுகளுக்கு தேன்.


02. காதலிக்க நேரமில்லை:

இப்படத்தை பற்றி சொல்வதற்கு புதிதாக என்ன இருக்கிறது? தமிழ் சினிமாவின் மாபெரும் சகாப்தம் இயக்கிய படம். அட்டகாசமான பாத்திரங்களின் தேர்வு, நூல் பிடித்தது போல திரைக்கதை, அருமையான பாடல்கள் இப்படத்தில் எதை பாராட்ட?, எதை விட? இதிலும் டி. எஸ். பாலையா தான் நாயகன். பாலையாவின் இளைய மகள் நிர்மலாவை ஏழையான ரவிசந்திரன் டாவடிக்க அவரது மூத்த மகள் காஞ்சனாவை பணக்கார முத்துராமன் லவ்வுகிறார். ஏழைகளை பிடிக்காத பாலையாவை ஏமாற்ற முத்துராமனை தனக்கு அப்பாவாக நடிக்க வைக்கிறார் ரவிசந்திரன். பிறகென்ன? ஒரே குழப்பங்களும், கொண்டாட்டங்களும் தான். பாடல்கள் அனைத்தும் அருமை என்றாலும் அனுபவம் புதுமை, நெஞ்சத்தை அள்ளிக் கொஞ்சம் தா, என்ன பார்வை உந்தன் பார்வை மூன்றும் எனது ஃபேவரிட்.


03. தில்லு முல்லு

Arguably one of the best comic capers of Tamil cinema. இப்படத்தின் சிறப்பே இதில் தலைவர் நடித்திருப்பது தான். மீசை இல்லாத தலைவரை எனக்கு தெரிந்து இப்படத்திலும், ராகவேந்திராவிலும் தான் பார்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். முந்தைய இரு படங்களில் பாலையா என்றால், இப்படத்தில் தேங்காய் ஸ்ரீனிவாசன். அமோல் பாலேகரின் கோல் மாலில் இல்லாத அந்த சிறுவன் பாத்திரம் இப்படத்தின் சிறப்பு. படத்தின் ஹைலைட் அந்த இன்டெர்வ்யூ ஸீக்வென்ஸ். இப்பொழுதும் எங்கள் நட்பு வட்டாரத்தில் யாராவது எதையாவது சில்லியாக செய்தால், "இதிலென்ன பெருமை? கெட் அவுட்." என்பது யாராவது ஒருத்தரின் வாயிலிருந்தாவது வெளிப்பட்டு விடும்.


04. மைக்கேல் மதன காம ராஜன்

கமலஹாசனின் திரைக்கதை நேர்த்திக்கு அபூர்வ சகோதரர்கள் சாட்சி பத்திரம் என்றால், இப்படம் மணி மகுடம். ஒரே மாதிரி இருக்கும் நான்கு சகோதரர்கள் சிறு வயதில் பெற்றோர்களிடம் இருந்து பிரிந்து விட, அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு சூழ்நிலையில் வளர ஒரு சந்தர்பத்தில் அவர்கள் அனைவரும் ஒரே சூழலில் வரும் வாய்ப்பு வருகிறது. அப்பொழுது நடக்கும் பிசகுகள் தான் படத்தின் கதை.

ஒவ்வொரு கமலாக கதையில் நுழைத்த சுவாரஸியம், பிசகில்லாமல் பிசகு நடக்கும் திரைக்கதை, கதையில் எந்த பாத்திரத்திற்கும் கூடவோ குறைவாகவோ இல்லாத முக்கியத்துவம் இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படத்தின் திரைக்கதை தமிழ் சினிமாவில் கால் பதிக்க முயலும் இயக்குனர்களுக்கு பைபிள்.


05. உள்ளத்தை அள்ளித்தா

ஒரு சட்டியில் அந்தாஸ் அப்னா அப்னா, பலே பாண்டியா, சபாஷ் மீனா மூன்றையும் போட்டு ஒரு குலுக்கு குலுக்கி எடுத்து அதில் மணிவண்ணன் மற்றும் கவுண்டமணியின் நக்கல், லொல்லு, நையான்டிகளை சேர்த்து கலக்கினால் உள்ளத்தை அள்ளித்தா. காபி என்ற குற்றசாட்டெல்லாம் எனக்கு கிடையாது. எங்கிருந்து தயாரித்தால் என்ன? தயாரிக்கப்பட்ட பொருள் எப்படி என்று தான் நான் பார்ப்பேன். அந்த முறையில் உள்ளத்தை அள்ளித்தா நிச்சயம் நூற்றுக்கு நூறு மார்க் எடுக்கும். கார்த்திக், மணிவண்ணன், கவுண்டர், செந்தில் என்று எந்த பாத்திரத்திலும் வேறு யாரையும் நினைத்து கூட பார்க்க இயலாத நடிப்பு. இரண்டரை மணி நேர நான் ஸ்டாப் கொண்டாட்டம். உள்ளத்தை அள்ளித்தா நிச்சயம் என் உள்ளத்தை கொள்ளை கொண்ட படம்.

2 Comments:

பொ.முருகன் said...

பாண்டியராஜன், நடித்த ஊரைதெரிஞிகிட்டேன் படத்தை ஏன்? மறந்துவிட்டீர்கள்.

பொ.முருகன் said...

பாண்டியராஜன், நடித்த ஊரைதெரிஞிகிட்டேன்,படத்தை ஏன்? எல்லோரும்,மறந்து போனார்கள் என்பது தெரியவில்லை.