Wednesday, January 04, 2012


பொடிமாஸ் - 01/04/2012

புத்தாண்டு பிறப்பு நன்றாக சென்றது. எனது மைத்துனருக்கு சிறிது உடல் நிலை சரியில்லை. அதனால் தீர்த்த பார்ட்டிகள் இல்லை. புத்தாண்டன்று சத்திய நாராயண விரத பூஜை செய்தோம். மனதிற்கு நெகிழ்ச்சியாக இருந்தது. இந்த ஆண்டு அனைவருக்கும் அருமையான ஆண்டாக அமைய எனது வாழ்த்துக்கள்.



ஆஸ்திரேலியாவில் வழக்கம் போலவே நம்மவர்கள் சொதப்புகிறார்கள். பாண்டிங்கை ஃபார்முக்கு கொண்டு வந்தாகி விட்டது. இந்த டூர் நாம் போகாமல் இருந்திருந்தால் அடுத்த ஆஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையே நடக்கவிருக்கும் போட்டிகளில் அவரை நிச்சயம் பொங்கல் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி இருப்பார்கள். பாண்டிங் இருக்கும் வரை சச்சினின் டெஸ்ட் சாதனைகளுக்கு சோதனை தான். சச்சினும் அடி வயிற்றில் அணுகுண்டு வைத்தது போலவே இருப்பார். சென்னையில் இருப்பவர்கள் விரைவில் பாண்டிங் ரிட்டயர் ஆக 'கிரிக்கெட்' பிள்ளையாருக்கு தினமும் பன்னிரெண்டு தோப்புக்கரணம் போடுங்கள். எது நடந்தாலும் நடக்காவிட்டாலும் உங்கள் தொப்பை குறையும்.



திருச்சியில் கடந்த மாதம் புதிதாக அஞ்சப்பர் ஹோட்டல் தொடங்கி இருக்குறார்கள். படுபாவிகளா நான் அங்கே இருக்கும் பொழுது தொடங்கி இருக்க கூடாதா? நாவில் எச்சில் ஊறுகிறது. இந்தியா செல்லும் பொழுது வகை தொகை இல்லாமல் சாப்பிட வேண்டும். நம்மாட்களின் பிரச்சினையே இதுதான். இந்தியாவிற்கு சென்றால் மினரல் வாட்டர், பீசா, பர்கர் கேட்பது. அமெரிக்கா வந்தால் பரோட்டா, சால்ணா கேட்பது. திருந்தவே மாட்டோம். நான் மட்டும் என்ன விதிவிலக்கா?



இந்த வெள்ளிகிழமை ப்ளேயர்ஸ் படம் வெளியாகிறது. இடாலியன் ஜாபின் தழுவல். அப்பாஸ் மஸ்தான் படங்கள் எனக்கு பிடிக்கும். சுவாரசியமாகவே இருக்கும். இதில் எனக்கு பிடித்த அபிஷேக் பச்சனும் இருக்கிறார். இந்த வார இறுதியில் பார்க்க வேண்டும். ஆனால் என்ன, படத்தை இந்திய சூழலுக்கு ஏற்றவாரு மாற்றியதில் ஒரு முக்கோண காதலையும் சேர்த்து தொலைத்ததாக சமீப பேட்டி ஒன்றில் படித்தேன். சொதப்பாமல் இருந்தால் சரி. அடுத்த வாரம் இருக்கவே இருக்கிறது நண்பன். வேட்டை பார்ப்பேனா என்று தெரியவில்லை. பார்க்க மாட்டேன் என்று தான் நினைக்கிறேன்.



வாஷிங்டன் டிசியில் வெட்பம் உறைநிலைக்கும் கீழே உள்ளது. இன்று காலை -10oC வெட்பம் பதிவானது. குழந்தையை எங்கும் வெளியில் அழைத்து செல்ல இயலவில்லை. நான்கு சுவருகளுக்குள்ளேயே அவன் இருக்கிறான். மாண்டியையும் வெளியில் அழைத்து செல்வது கடினமாக இருக்கிறது. நல்ல வேளை இன்னும் பணிப்பொழிவு தொடங்க வில்லை. இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கே சுமார் இரண்டு அடி பணிப்பொழிவு இருந்தது. இன்னும் இரண்டு மாதங்கள் பல்லை கடித்துக் கொண்டு ஓட்டி விட்டால் அதன் பிறகு அடுத்த பத்து மாதங்களுக்கு கவலை இல்லை. இங்கேயே இப்படி என்றால் கனடா போன்ற தேசங்களில் இருப்பவர்களின் நிலையை நினைத்தாலே வயிற்றை கலக்குகிறது.



இந்த மாத இறுதியில் எனது நண்பர் தனது குடும்பத்துடன் இந்தியா நிரந்தரமாக செல்கிறார். சென்ற ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இம்மாதிரி மூன்று பேர் இந்தியா சென்று விட்டார்கள். நான் வந்து ஆறு ஆண்டுகள் ஆகிறது. விரைவில் இந்தியா செல்ல வேண்டும் என்ற ஆவல் வந்து விட்டது. பார்ப்போம், கடவுள் விட்ட வழி.



சென்னையில் வீடு வாங்க வேண்டும் என்றால் ஏதாவது வங்கியை கொள்ளை அடிக்க வேண்டும் போல் உள்ளது. அவ்வளவு விலை சொல்கிறார்கள். உண்மையிலேயே அவ்வளவு விலையா இல்லை ஸ்பெகுலேஷன்களினால் விலை ஏறுகிறதா என்று தெரியவில்லை. எஸ். வீ. சேகரின் பாலவாக்கத்தில் திருடர்கள் நாடகத்தில் வீட்டு மனை வாங்க கீழ்கண்டவாரு விளம்பரம் இருக்கும்.

"சென்னைக்கு அருகில் உள்ள அடையார், அடையாருக்கு அருகில் உள்ள திருவான்மயூர், திருவான்மயூருக்கு அருகில் உள்ள பெசன்ட் நகர், பெசன்ட் நகருக்கு அருகில் உள்ள பாலவாக்கம்" என்று நகைச்சுவையாக சொல்வார்கள்.

இன்று அதெல்லாம் கடந்து மாமல்லபுரத்திலேயே கோடி கணக்கில் சொல்கிறார்கள். திருச்சியில் ஸ்ரீ ரங்கத்தில் நாற்பது லட்சம் ஐம்பது லட்சம் என்கிறார்கள்.

இந்தியாவில் நிறைய ஏழைகளுக்கு நடுவே நிறைய பணக்காரர்களும் இருக்கிறார்கள்.



புத்தாண்டு என்றாலே இந்த பாடல் தான் எல்லோர் நினைவிற்கும் வரும். இந்த பாடலை திருச்சி REC யில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் ஃபெஸ்டம்பரில் பாடியே முதல் பரிசை தட்டி செல்லும் எங்கள் கல்லூரி. நான் படித்த பொழுது கார்த்திக் ஸ்ரீனிவாஸ் என்ற மாணவன் SPB போலவே பாடுவான். தொடர்ந்து 15 ஆண்டுகளாக எங்கள் கல்லூரியே அதை வென்று வருகிறது என்கிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.


0 Comments: