Friday, December 09, 2011


இதெல்லாம் ஒரு பிழைப்பு, த்தூ!



நேற்று கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று திடீரென்று தீப்பிடித்தது. (தீ என்ன தபால் முலம் சொல்லி விட்டா வரும்?). தீ பிடித்த உடன் நோயாளிகளை மருத்துவமனையிலேயே விட்டு விட்டு மருத்துவர்களும், செவிலியர்களும், மற்ற மருத்துவமனை ஊழியர்களும் நோயாளிகளை பற்றிய கவலை இல்லாமல் வெளியே ஓடி இருக்கிறார்கள். நோயாளிகளில் நடக்க முடியாதவர்கள் பலர் புகையினால் சூழப்பட்டு சுவாசிக்க முடியாமல் இறந்து விட்டார்கள். பொதுமக்களும், தீயணைப்பு படை வீரர்களும் சேர்ந்து தான் பல நோயாளிகளை மீட்டிருக்கிறார்கள். தற்பொழுது கிடைத்த செய்தியின் படி இறந்தவர்களின் எண்ணிக்கை 89.

மருத்துவமனையின் அடித்தளத்தில் வைக்கப்பட்டிருந்த எளிதில் தீப்ப்பற்றக்கூடிய பொருட்களால் இது நடந்திருக்கலாம் அன்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். வழக்கம் போலவே எல்லா தனியார் மற்றும் அரசு வளாகங்கள் போலவும் இதிலும் போதுமான அவசர கால வசதிகள் இல்லை. அரசு இயந்திரம் வழக்கம் போலவே எல்லாம் நடந்து முடிந்த உடன் மருத்துவமனை நிர்வாகிகளை கைது செய்திருக்கிறது. மருத்துவமனையின் அங்கீகாரத்தை ரத்து செய்திருக்கிறது.

மருத்துவர்களும், செவிலியர்களும், மற்ற மருத்துவமனை ஊழியர்களும் செய்ததை பார்க்கும் பொழுது "மனிதம் செத்துவிட்ட ஒரு சமூகத்தில் வேறு என்ன எதிர் பார்க்க முடியும்?" என்று கேட்க விழைந்தாலும் பொதுமக்களின் சேவையை பார்க்கும் பொழுது மனிதம் இன்னும் பல இடங்களில் தூங்கிக் கொண்டு தான் இருக்கிறது, செத்து விடவில்லை என்று தெரிகிறது. அதை தட்டி எழுப்ப இம்மாதிரி விபத்துக்கள் தேவை இல்லாமல் அதாகவே எழுந்து நின்று சோம்பல் முறித்தால் சமூகத்திற்கு நல்லது.

இறந்த ஆத்மாக்களுக்கு எனது அஞ்சலிகள்.

0 Comments: