Tuesday, September 27, 2011


எங்கேயும் எப்போதும்



நான் படம் பார்த்து விட்டு மனம் கனத்து அழுத படங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சலங்கை ஒலி இறுதிக் காட்சியில் பாலு இறந்த உடன் ஏற்பட்ட வலி, அன்பே சிவம் இறுதிக் காட்சியில் நல்ல சிவம் நடக்கும் பொழுது ஒலிக்கப்படும் யார் யார் சிவம் பாடல் கேட்ட பொழுது ஏற்பட்ட வலி நிச்சயம் எனக்கு எங்கேயும் எப்போதும் பார்த்த உடன் ஏற்பட்டது.

விபத்து என்பது ஒரு செய்தி என்பதையும் கடந்து அதனால் பாதிக்கப்பட்ட மக்களின் விபத்திற்கு முன்னரான கலர்ஃபுல் வாழ்க்கையை இவ்வளவு அழகாக யாரும் சொன்னதில்லை என்றே நினைக்கிறேன்.

இரண்டு காதல்கள். இரண்டு பேரூந்துகள். ஒரு விபத்து. ஊடே வாழை பழத்தில் ஊசி ஏற்றியதை போல பல நல்ல கருத்துக்கள். இது தான் எங்கேயும் எப்போதும்.

கதை என்று பெரிதாக ஒன்றும் இல்லை என்றாலும் நிகழ்வுகளின் கோர்வை நம்மை கட்டிப் போடுகிறது.

சென்னைக்கு புதிதாக ஒரு நேர்முகத் தேர்விற்காக வரும் அனன்யாவிற்கு சந்தர்ப்ப வசத்தால் ஒரு நாள் முழுதும் உதவிடுகிறார் ஷர்வானந்த். முதலில் அவர் மீது நம்பிக்கை இல்லாமல் சந்தேகத்துடனேயே அணுகும் அனன்யாவிற்கு போகப் போக அவர் மீது நம்பிக்கையும் மரியாதையும் வந்து விடுகிறது.

திருச்சியில் ஆறு மாத காலமாக அஞ்சலியை தூரத்தில் இருந்தே கை ஆட்டி காதலிக்கிறார் ஜெய். அவரது காதலை புறிந்து கொண்டு அவரை பல சோதனைகளுக்குள்ளாக்கி முடிவில் அவரை காதலிக்கிறார் அஞ்சலி. அஞ்சலியை விழுப்புரம் அருகில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு அழைத்து சென்று தனது பெற்றோர்களிடம் அறிமுகம் செய்ய சென்னை செல்லும் பேரூந்தில் பயணிக்கிறார்கள் ஜெய்யும் அஞ்சலியும்.

இதனிடையே தேர்வு முடிந்து திருச்சி வரும் அனன்யா, மெதுவாக ஷர்வானந்த் மீது காதல் கொள்கிறார். ஷர்வானந்திற்கும் அனன்யா மீது காதல் வருகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் தேடி ஒரே நேரத்தில் முறையே சென்னைக்கும் திருச்சிக்கும் வருகிறார்கள். தேடி அலைந்து கண்டுபிடிக்க முடியாமல் மீண்டும் அவர்கள் ஊர் திரும்புகிறார்கள். ஷர்வானந்த், ஜெய் மற்றும் அஞ்சலி பயணிக்கும் பேரூந்தில் சென்னை செல்ல, அனன்யா அதே நேரத்தில் சென்னையிலிருந்து கிளம்பும் ஒரு தனியார் பேரூந்தில் திருச்சி வருகிறார்.

இரண்டு பேரூந்துகளும் விழுப்புரம் அருகே விபத்துக்குள்ளாக முடிவு என்ன? என்பதை வெள்ளித்திரையில் காண்க.

படத்தின் வெற்றியே பாத்திரங்கள் தான். அருமையான காஸ்டிங். ஜெய், அஞ்சலி, அனன்யா, ஷர்வானந்த் மட்டும் இல்லாது அனன்யாவின் அக்கா, அஞ்சலியின் பெற்றோர், ஊர் பெரியவர், துபாயில் இருந்து திரும்பும் அந்த நபர், நடத்துனர்கள் என்று ஒவ்வொருவரையும் பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்திருக்கிறார் இயக்குனர்.

நடிப்பில் அனைவரும் அசத்தி இருந்தாலும், என்னை மிகவும் கவர்ந்தவர் அஞ்சலி. கடைசி காட்சியில் அவரது நடிப்பு அட்டகாசம். இவரை போன்ற நடிகைகள் தமிழ் சினிமாவில் அபூர்வம்.

அடுத்து பாடல்கள். படல்கள் அனைத்தும் நன்றாக இருந்தன. குறிப்பாக சொட்ட சொட்ட பாடல் சின்மயீ குரலில் காதில் தேனாக ஒலிக்கிறது. மாசமா, கோவிந்தா படல்கள் படமாக்கிய விதம் அருமை.

விபத்து நடக்கும் வேளையில் வெளியில் இருந்து லேசாக காட்டிவிட்டு உள்ளிருந்து பயணிகளின் பார்வையில் அதனை படமாகிய விதம் அருமை.

வசனங்கள் மிகவும் கூர்மை. குறிப்பாக அஞ்சலியின் வசனங்கள்.

"யார்டா நீ? மாமனா? மச்சானா? 50 வருஷம் குடும்பம் நடத்தனும் இல்லை?" என்று கூறி HIV டெஸ்ட் எடுப்பது, "மண்ணு திங்கற உடம்பை கொடுத்து தான் தொலைங்களேன்டா" என்று கூறி உடல் தானத்திற்கு சம்மதம் வாங்குவது, "என்னை காதலிச்சா என்ன பிரச்சனைகள் வரும்னு உனக்கு தெரியனும்" என்று கூறி தனது காவல் துறை அப்பாவிடமும், தன்னை ஒரு தலையாக காதலிப்பவனிடமும் ஜெய்யை அனுப்புவது என்று அவர் அமர்க்களப்படுத்துகிறார். அதில் ஒரு சண்டை காட்சியை காட்சியாக சொல்லாமல் வசனத்தின் வாயிலாக சொன்ன விதம் அருமை.

அடுத்ததாக விபத்து நேர்ந்த உடன் நடக்கும் காட்சிகள் பாராட்டப் பட வேண்டியவை. காவல் துறைக்கு தகவல் சொல்லுவதாகட்டும், 108 ஆம்புலன்ஸ் கூப்பிடுவதாகட்டும், பத்திரிக்கைக்கு தகவல் சொல்லுவதாகட்டும், விபத்தில் அதிகம் காயமடையாதவர்கள், ஓடிசென்று மற்றவர்களுக்கு உதவுவதாகட்டும் மனித நேயத்துடன் கொரியோகிராஃப் செய்யப்பட்ட காட்சிகள் அவை.

கடைசியில் மிகவும் பாராட்ட வேண்டியது படம் சொல்லும் செய்திகள்.
  • 1. ஒருவர் மீதும் தேவை இல்லாமல் சந்தேகம் கொள்ள தேவை இல்லை.

  • 2. குடும்பத்தை புறக்கனித்து விட்டு வேலை வேலை என்று இருந்தால் குடும்பத்தை பார்க்கவே முடியாத நிலை ஏற்படக் கூடும்.

  • 3. வண்டிகளில் பறந்து விழும் பொருட்களை ஏற்றும் பொழுது கூடுதல் பாதுகாப்பு அவசியம்.

  • 4. வேகமாக வண்டி ஓட்டுதல் கூடாது.

  • 5. திருமணத்திற்கு முன்னர் HIV டெஸ்ட் எடுத்தல் அவசியம்.

  • 6. உடல் தானம் செய்வது பலருக்கு வாழ்வளிக்கும்.

  • 7. ஒரு விபத்து நேரும் பொழுது முதலில் அடிபட்டவர்கள், வயதானவர்கள், குழந்தைகள் போன்றவர்களை ஏற்றி விட்டு கடைசியில் நலமாக உள்ளவர்கள் செல்ல வேண்டும். குறிப்பாக நம்முடன் இருப்பவர்களுக்கு அடிபட்டு விட்டதே என்று நாமும் செல்வது தவிர்க்கப்பட வேண்டும்.
இவை அனைத்தையும் ஏதோ பிரசாரம் போல சொல்லாமல் கவித்துவத்துடன் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

அட்டகாசம் சரவணன். வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.

0 Comments: