Sunday, October 10, 2010

எந்திரன் (Robo)



சூப்பர் ஸ்டாரின் படம் வெளிவரும் நாள் எல்லாம் நமக்கு தீபாவளி தான். அவரின் ஒவ்வொரு படமும் எனக்கு ஒவ்வொரு புதுமையான அனுபவம். அமெரிக்கா வந்து முதலில் நான் பார்த்த அவரின் படம் சிவாஜி. பெரும் ஜனக் கூட்டம். அவ்வளவு கூட்டத்தை அமெரிக்காவில் நான் பார்த்ததே கிடையாது. பல பேர் சிவாஜி படம் போட்ட டி-ஷர்டுடன் வந்திருந்தார்கள். தமிழர்கள் என்றில்லை, தெலுங்கு தேசத்தவர்களுக்கும் தலைவரின் படம் வந்தால் பெரு மகிழ்ச்சி. அவர்களும் விருப்பத்துடன் சென்று பார்ப்பார்கள்.

இப்பொழுது எந்திரனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நெடு நாட்கள் காத்திருந்து படம் வெளி வந்த உடன் பார்க்க முடியாமல் நேற்று தான் பார்க்க முடிந்தது. அட்டகாசமான படம். படம் நெடுக ரஜினியின் விஸ்வரூபம் தான்.

படத்தின் கதை என்று பார்த்தால் ஒன்றும் பெரிதாக இல்லை. வசீகரன் ஒரு பெரிய விஞ்ஞானி. அவர் பல நாட்கள் உழைப்பில் சிட்டி என்றொரு எந்திர மனிதனை உருவாக்குகிறார். அதனை இந்திய இராணுவத்திற்கு பரிசளிக்க விரும்புகிறார். அவரின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட AIRD தலைவர் போரா சிட்டியை சோதனை செய்யும் பொழுது அதனிடம் வசீகரனை கத்தியால் குத்தும் படி கட்டளையிடுகிறார். அதனை சிட்டி செயல் படுத்தும் முன்னர் தடுத்தும் விடுகிறார். பின்னர் இதையே காரணம் காட்டி வசீகரனின் கண்டுபிடிப்பை நிராகரிக்கிறார்.

பின்னர் வசீகரன் சிட்டிக்கு மனித உணர்ச்சிகளை ஊட்டுகிறார். ஒரு கட்டத்தில் சிட்டி வசிகரனின் காதலியான சனா மீது காதல் வயப்படுகிறது. இதனை அறிந்த வசீகரன் சிட்டியை கண்டிக்கிறார். சனாவும் இது நடக்காத காரியம் என்று கூறுகிறாள். இதனால் மனமுடைந்த சிட்டி, இராணுவத்தின் தேர்வில் தோல்வி அடைய, கோபம் கொண்ட வசீகரன் சிட்டியை துண்டு துண்டாக்கி குப்பையில் வீசுகிறார்.

அப்பொழுது அங்கு வரும் போரா, சிட்டியின் துண்டுகளை எடுத்து அதற்கு உயிரளிக்கிறார். அதற்கு எதிர்மறை சக்தியையும் கொடுக்கிறார். அந்த சக்தியை வைத்துக் கொண்டு சிட்டி சனா வை கடத்துகிறது. போராவை கொல்கிறது. தன்னை போலவே பல இயந்திர மனிதர்களை உருவாக்குகிறது. நகரத்தையே அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது. பின்னர் வசீகரன் எப்படி சிட்டியை வென்று நகர மக்களையும் சனாவையும் காப்பற்றுகிறார் என்பது தான் கதை.

படத்தில் முதல் பாராட்டு தயாரிப்பாளர் திரு. கலாநிதி மாறன் அவர்களுக்கு தான். பணத்தை தண்ணீராய் செலவு செய்திருக்கிறார். இதற்கு முன்னர் ப்ளூ என்றொரு படம் ஹிந்தியில் எடுத்தார்கள். அதற்கும் நிறைய செலவு செய்யப்பட்டது. ஆனால் படம் படு குப்பை. ஆனால் எந்திரனிலோ சரியாக திட்டமிட்டு செலவு செய்திருக்கிறார்கள். இதனை பார்க்கும் பொழுது ஒருவேளை கமலின் மருதநாயகமும், மணி ரத்னத்தின் பொன்னியின் செல்வனும் இவரால் நிஜமாகக் கூடுமோ என்ற நம்பிக்கை கூடுகிறது.

அடுத்தது தலைவர். வசீகரனாகவும், சிட்டியாகவும் தலைவர் இரு வேடங்களில் அதகளப்படுத்தி இருக்கிறார். முன்னரே சொன்னது போல படம் முழுதும் அவரின் விஸ்வரூபம் தான். குறிப்பாக படத்தின் பிற்பகுதியில் வரும் வில்லன் ரஜினி. அட்டகாசம். "மே! மே!" என்று அவர் ஆடு போல கத்தும் பொழுது நமக்கு மயிர் சிலிர்க்கிறது. மூன்று முடிச்சு காலத்தில் இருந்து எந்திரன் காலம் வரை தமிழில் வில்லன் என்றால் தலைவர் தான்.

மூன்றாவது இயக்குனர். படம் முழுதும் ஷங்கரின் உழைப்பு தெரிகிறது. டெக்னிகலாக இப்படம் இந்திய சினிமாவின் மைல்கல். கடைசி 15 நிமிடங்கள் ஆங்கிலப் படம் பார்ப்பது போல இருந்தது. படத்தின் எந்தப் பகுதி எந்த ஆங்கிலப் படத்தில் இருந்து சுட்டது என்ற ஆராய்ச்சியெல்லாம் எனக்கு தேவை இல்லாதது. இன்னும் 10 ஆண்டுகளில் கூட தமிழில் இப்படி ஒரு படம் வருமா என்பது சந்தேகமே.

மற்றபடி ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, எடிட்டிங், மேக் அப், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சண்டை பயிற்சி, பிண்ணனி இசை என்று ஒவ்வொன்றாக பாராட்டிக் கொண்டிருந்தால் பதிவு பெரிதாகி விடும். அதனால் ஒட்டு மொத்த எந்திரன் குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள் மற்றும் நன்றிகள்.

குறைகள் என்று பெரிதாக கூறுவதற்கு எதுவும் இல்லை. பாடல்கள் எனக்கு சிவாஜி அளவிற்கு பிடிக்கவில்லை. இன்னும் சில முறை கேட்டால் பிடிக்குமோ என்னவோ. ஐஷ்வர்யாவை கல்லூரி மாணவியாக பார்க்க முடியவில்லை. சந்தானம் மற்றும் கருணாஸ் இருவரும் இப்படத்திற்கு தேவையே இல்லை. மேலும் இந்தியாவே வியக்கும் இயந்திர மனிதனை உருவாக்கும் விஞ்ஞானி இவர்களை போன்ற டம்மி பீஸ்களை தன்னுடன் வைத்துக் கொள்வாரா என்ற கேள்வி வருகிறது. வேறு ஒன்றும் சொல்ல தோன்றவில்லை.

இப்படி ஒரு சில குறைகள் இருந்தாலும் தலைவர் தலைவர் தான். அவரால் மட்டுமே இப்படி ஒரு படத்தை அளிக்க முடியும். மொத்தத்தில் தளபதியை போலவே, பாட்ஷாவை போலவே, படையப்பாவை போலவே, சந்திரமுகியை போலவே, சிவாஜியை போலவே எந்திரனும் ஒரு மறக்க முடியாத அனுபவம்.

Friday, October 01, 2010

அஞ்சலி!!!