Thursday, September 18, 2008


மனதை சுத்தம் செய்!

நாம் காலை எழுந்த உடன் செய்யும் செயல்களை என்றாவது கவனித்து இருக்கிறீர்களா? காலையில் நாம் முதலில் செய்யும் செயல் என்ன? பல் துலக்குவது. அது வாயில் உள்ள கிருமிகள் அசுத்தங்கள் போன்றவற்றை அழித்து சுத்தம் செய்வதற்கு. பின்னர் உடல்கழிவுகளை வெளியேற்றுகிறோம். அது உடலின் உள்ளே உள்ள அசுத்தங்களை வெளியேற்றுவதற்கு. பின்னர் குளிக்கிறோம். அது புற அசுத்தங்களை நீக்குவதற்கு.

ஆக நாம் தினமும் காலையில் அசுத்தங்களை நீக்கி சுத்தமாக இருக்கவே பல செயல்கள் செய்கிறோம். நாம் புறத்தில் செய்யும் செயல்கள் இவ்வாறு இருக்க நமது உடல் பாகங்கள் அகத்தில் செய்யும் செயல்களை கவனித்தால் இன்னும் பல விளங்கும்.

உதாரணத்திற்கு நமது நாசிகள் மற்றும் நுரையீரல் சுத்தமான காற்றினை உடலுக்கு அளித்து அசுத்த காற்றினை வெளியேற்றுகின்றன. இதயம் குருதியை சுத்தம் செய்து அதனை உடலுக்கு அளிக்கிறது. சிறுகுடல் உணவை சுத்தம் செய்து அதனை உடலுக்கு அளித்து அதில் உள்ள கழிவுகளை பெருங்குடல் வாயிலாக வெளியேற்ற உதவுகிறது. கிட்னியும் (தமிழில் என்ன?) குருதியில் உள்ள அசுத்தங்களை வெளியேற்றவே உதவுகிறது.

நான் மேலே சொன்னவற்றில் ஏதாவது ஒன்று சரியாக வேலை செய்யவில்லையென்றால் கூட அதன் விளைவை நான் விளக்க தேவை இல்லை. உடல் அகத்திலும், புறத்திலும் என்றுமே அசுத்தத்தை விரும்புவதில்லை. அசுத்தம் உள்ளே செல்லும் போதும், அது வெளியே செல்லாமல் உள்ளேயே தங்கும் போதும் நோயின் மூலமாக எதிர்ப்பை காட்டுகிறது.

இப்படி அகத்திலும், புறத்திலும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ள தினமும் செயல்கள் நடக்க என்றாவது நாம் நமது மனதை சுத்தமாக வைத்து அசுத்தத்தை நீக்க முயன்றிருக்கிறோமா? நமது மனதில் அசுத்தம் தங்கினால் ஏற்படும் தீமைகளை பற்றி கவலை படுகிறோமா? அசுத்தத்தை நீக்கி மனதினை சுத்தமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி அறிந்து கொண்டிருக்கிறோமா?

நமது மனதில் தான் பொய், பொறாமை, கோபம், எரிச்சல், புறங்கூறுதல், வஞ்சகம் என்று எத்துனை எத்துனை அசிங்கங்களை தேக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்கே தினமும் காலை எழுந்த உடன், "இன்று மனதில் உள்ள அசுந்தங்களை நீக்குவேன். அசுத்த எண்ணங்கள் மீண்டும் வராமல் பார்த்துக் கொள்வேன்." என்று உங்களுக்குள்ளே தீர்மானித்து அந்த நாளை தொடங்குங்கள். ஒரு சில நாட்களிலேயே அதன் பயனை உணர்வீர்கள்.

எண்ணம் போலவே செயல், செயல் போலவே வாழ்வு. மனதில் உள்ள அசுத்தங்களை நீக்கினால் வாழ்வும் சிறந்து விளங்கும்.

சுமார் நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பு பொதிகை தொலைக் காட்சியில் நான் கண்ட/கேட்ட திரு. பெரியார் தாசன் அவர்களின் உரை. எனது நினைவிலிருந்தே எழுதி இருப்பதால் சிறிது பிழைகள் இருக்கலாம். யாரேனும் சுட்டியுடன் தெரியப்படுத்தினால் திருத்திவிடுகிறேன்.

2 Comments:

Raj Chandirasekaran said...

Kidney- சிறுநீரகம்

SathyaPriyan said...

//
Raj Chandirasekaran said...
Kidney- சிறுநீரகம்
//
நன்றி Raj. இதை எப்படி தவறவிட்டேன் என்பது தெரியவில்லை. சட்டென்று நினைவிற்கு வரவில்லை.