Monday, October 16, 2006

கமல் - ஒரு சகாப்தம்

கமல் - இந்த மூன்றெழுத்துப் பெயருக்கு பின்னால் தான் எத்துனை விஷயங்கள் உள்ளன. ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடன இயக்குனராக பொருப்பேற்று, துனை நடிகராகி, கதா நாயகனாக பதவி உயர்வு பெற்று இன்று உலக நாயகனாக இருக்கிறார். அவரின் இத்தகைய படிப்படியான வளர்ச்சிக்கு பின்னால் இருக்கும் அவரது உழைப்பை என்னால் உணர முடிகிறது. இன்றும் அவர் ஒவ்வொரு படம் வெளியிடுவதற்கும் பல தடைகளை கடக்க வேண்டி இருக்கிறது.


தனக்கு தெரியாத அரசியலில் பங்கு கொள்ளாமல் தனக்கு நன்கு தெரிந்த நடிப்புத் தொழிலில் கவனம் செலுத்துபவர். தயாரிபாளர்களின் பணத்தை தண்ணீராய் செலவழிக்கும் நடிகர்களிடையே தனது சோதனை முயற்சிகளையெல்லாம் தனது சொந்த செலவிலேயே செய்பவர். தான் சம்பாதித்த பணம் அனைத்தையும் சினிமாவிலேயே முதலீடு செய்பவர். இன்றும் வாடகை வீட்டில் குடி இருப்பவர். சினிமாவில் மட்டுமில்லாமல் வெளி உலகிலும் உத்தமர் வேஷம் போடும் நடிகர்களிடையே வெளி வேஷம் போடத் தெரியாத நடிகர். தான் இப்படித்தான் என்று நேர்மையாக உரைக்கும் தீரம் கொண்டவர். இப்படி பல அவரை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்.


சிறு வயதிலிருந்து அவரது பல படங்களை பார்த்து ரசித்தவன் நான். அவ்வாறு நான் ரசித்த படங்களை இங்கே தொகுத்து வழங்கி உள்ளேன்.

1) அபூர்வ ராகங்கள் (1975) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


பெயருக்கேற்ற படி அபூர்வமான கதை. முரண்பாடான உறவுகளையும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் பற்றியது. பாலசந்தர் என்றாலே பிறர் தொட அஞ்சும் கதைக் களத்தை தன் கையில் எடுப்பவர் என்பதை மீண்டும் ஒரு முறை உண்மையாக்கிய படம்.

2) மன்மத லீலை (1976) இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


கமல் பெண்ணாசை பிடித்தவனாக நடித்த படம். 'பாலசந்தர் டச்' என்று பரவலாக கூறப்படுவது அதிகம் உள்ள படம். விரஸமான கதையை விரஸமில்லாமல் பாலசந்தரால் மட்டுமே கூற முடியும் என்று எடுத்துக் காட்டிய படம்.


3) 16 வயதினிலே (1977) - இயக்குனர் : திரு. பாரதிராஜா


தமிழ்சினிமா உலகை புரட்டிப்போட்ட ஒரு திரைப்படம். கிராமம் என்றால் பச்சை பசேல் என்று பசுமையாக, பணக்கார நாட்டாமையின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற தமிழ் சினிமாவின் வரையறையை உடைத்தெறிந்து தமிழ்நாட்டு கிராமங்களின் உண்மை நிலையை மக்களுக்கு காட்டி அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய படம். பாரதிராஜா, இளையராஜா, கமல், ரஜினி, ஸ்ரீ தேவி, கவுண்டமணி போன்ற அனைவருக்கும் புகழ் சேர்த்த படம். வில்லன் 'டேய்!' என்று திட்டி விட்டாலே தனது 'இமேஜ்' போய்விடும் என்று பயப்படும் இன்றைய கதாநாயகர்கள் வெட்கி தலைகுனியும் விதம், காதல் இளவரசனாகவும், கல்லூரிப் பெண்களின் ஆதர்ச நாயகனாகவும் இருந்த காலகட்டத்தில் தனது 'இமேஜ்' பற்றிய பயமில்லாமல் கதைக்கு தேவையானதால் ஒரு புதிய இயக்குனரின் (பாரதிராஜா) சொல் கேட்டு கோவணத்துடன் நடிக்க தயங்காத கமலின் செயல் பாராட்டத்தக்கது.





4) நிழல் நிஜமாகிறது (1978) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


ஒரே ஒரு படம் 100 நாள் ஒடிவிட்டாலே அடுத்த ரஜினி நான் தான் என்று நினைத்துக் கொண்டு இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் பீதியில் ஆழ்த்தி அவர்கள் வயிற்றில் புளியை கரைக்கும் இன்றைய இம்சை அரச நாயகர்களிடையே (வடிவேலுவை சொல்லவில்லை), 16 வயதினிலே என்ற வெள்ளிவிழா படத்தை அடுத்து தனக்கு துளியும் முக்கியத்துவம் இல்லாத கதையில் நடித்ததற்காகவே கமலை பாராட்டலாம். பாலசந்தர் உடைத்தெறிந்த தமிழ் சினிமாவின் எத்தனையோ வரையறைகளில் ஒன்று,


"ஒருவனால் கற்பழிக்கப்பட்ட பெண் ஒன்று தற்கொலை செய்து கொள்ள வேண்டும், இல்லை அவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும்."


ஷோபாவை சுற்றியே பின்னப்பட்ட கமலுக்கு சிறிதும் முக்கியத்துவம் இல்லாத அருமையான கதை.



5) மரோசரித்ரா (1978 - தெலுங்கு) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


இப்படம் சென்னையில் ஒரு வருடம் ஓடி சாதனை படைத்தது. காதலுக்கு தடையாக இப்படத்தில் இயக்குனர் கையில் எடுத்திருப்பது மொழியை. தமிழ் பேசும் ஒருவனும், தெலுங்கு பேசும் ஒருத்தியும் காதலிப்பதால் வரும் விளைவுகளே படத்தின் கதை. இப்படம் 'ஏக் தூஜே கேலியே' என்ற பெயரில் ஹிந்தியில் மொழி மாற்றம் செய்யப்பட்டு அங்கும் பெரு வெற்றி பெற்றது.


6) சிகப்பு ரோஜாக்கள் (1978) - இயக்குனர் : திரு. பாரதிராஜா


கிராமத்து இயக்குனர் என்று முத்திரை குத்தப்பட்ட பாரதிராஜாவின் பெட்டகத்திலிருந்து வந்த ஒரு 'ஸைக்கோ திரில்லர்'. தான் காதலித்து திருமணம் செய்து கொண்டவன் ஒரு ஸைக்கோ என்பதை அறிந்த உடன் ஸ்ரீ தேவியின் நடிப்பு, உயிர் மேல் உள்ள பயத்தினை அவர் காட்டிய விதம் அனைத்தும் பாராட்டப்பட வேண்டியவை.


7) அவள் அப்படித்தான் (1978) - இயக்குனர் : திரு.C.ருத்ரையா


ஜெயகாந்தனின் கதை. நாவலை இதுவரை படிக்காத காரணத்தினாலோ என்னவோ எனக்கு மிகவும் பிடித்த படம். தமிழ் சினிமா தலையில் தூக்கி வைத்து ஆடும் பெண் கற்பு நிலையை இடது காலால் உடைத்த படம். படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் சாட்டையடிகள்.


பெண் விடுதலை பேசிக்கொண்டே பெண்ணுறிமை-பெண் விடுதலை என்றால் என்னவென்றே தெரியாத பெண்ணை திருமணம் செய்யும் நாயகனாக கமல், இருமுறை காதலித்து, கற்பிழந்த நாயகியாக ஸ்ரீ பிரியா. அட்டகாசமான படம்.

8) நினைத்தாலே இனிக்கும் (1979) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


பின்னர் வேறு வேறு பெயர்களில் பல முறை படமாக்க பட்டுவிட்ட கதை. நோயினால் பாதிக்கப்படும் கதா நாயகி. இசைக் கலைஞன் நாயகன். நாயகனின் நன்பன். இவர்களை சுற்றி பின்னப்பட்ட கதை. படம் பார்த்தவர்களால் மறக்க முடியாதது 'சம்போ சிவ சம்போ' கதா பாத்திரம் தான். ரஜினி, கமல் இருவருக்குமே சம்பளம் குறைவாக கிடைப்பதால், இனி இருவரும் தனித்தனியே நடிப்பது என்று முடிவு செய்தது இப்படத்தில் நடிக்கும் போது தான். சூப்பர் ஸ்டார் உருவாக அடித்தளம் இட்டது இப்படம் தான்.


9) வறுமையின் நிறம் சிகப்பு (1980) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


1980 களில் இந்தியாவில் தலைவிரித்தாடிய தீண்டாமை, பெண்ணடிமை, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றை அடிப்படையாக கொண்டு பின்னப்பட்ட திரைக்கதை. வேலையில்லா பட்டதாரிகளான மூன்று இளைஞர்கள். மூவரும் எவ்வாறு அவர்களின் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர் கொள்கிறார்கள் என்பது கதை. எக்குலத்தில் பிறப்பதும் உயர்வல்ல, எத்தொழில் செய்வதும் இழிவல்ல என்ற அருமையான கருத்தை கூறும் கதை.




10) மீண்டும் கோகிலா (1981) - இயக்குனர் : திரு. G.N.ரங்கராஜன்


மனைவிக்கு துரோகம் செய்யும் நாயகனின் கதை. அழகான மனைவியை விட்டு நடிகை மீது ஆசைப்படும் நாயகனாக கமல். அவரது மனைவியாக ஸ்ரீ தேவி. நடிகையாக தீபா. அழகான கதை; அருமையான பாத்திரப் படைப்பு.


11) ராஜ பார்வை (1981) - இயக்குனர் : திரு. சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


இது கமலின் 100வது படம். முதல் தயாரிப்பு. பார்வையற்ற ஒரு வயலின் கலைஞனின் கதை. தனது சொந்த தயாரிப்பினாலோ என்னவோ, இதற்கு முன் நாம் பார்த்திராத கமலை இதில் பார்க்கலாம். பார்வையற்ற மனிதராகவே வாழ்ந்து காட்டி இருப்பார். நெஞ்சை தொடும் உருக்கமான கதை.


12) மூன்றாம் பிறை (1982) - இயக்குனர் : திரு. பாலு மகேந்திரா


கமலுக்கு தேசிய விருதை வாங்கி கொடுத்த படம். படம் முழுதும் ஸ்ரீ தேவியின் தான் நடிப்பில் ராணி என்று நிரூபித்து காட்ட, இறுதியில் ஒரே காட்சியில் கமல், தான் நடிப்பில் ராஜா அல்ல சக்கரவர்த்தி என்று பரைசாற்றிய படம்.


13) ஸிம்லா ஸ்பெஷல் (1982) - இயக்குனர் : திரு. V. ஸ்ரீனிவாசன்

கமல் முதன் முதலில் நடித்த முழு நீள நகைச்சுவை படம். நாடக கலைஞர்களின் வாழ்க்கையை நகைச்சுவையாக சொல்லும் படம். கமல், S. Ve. சேகர், ஸ்ரீ பிரியா மூவரும் நகைச்சுவை நடிப்பில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபித்த படம்.

14) சாகர சங்கமம் (1983 - தெலுங்கு) - இயக்குனர் : திரு.கே.விஷ்வநாத்


அருமையான ஒரு இசைக் காவியம். நடனத்தையே தனது உயிர் மூச்சாக கொண்ட ஏழை நாயகனுக்கும் நடனத்தை நேசிக்கும் விதவை நாயகிக்கும் இடையில் பூக்கும் காதலை அழகாக கூறிய படம். படம் பார்க்கும் அனைவரையும் அழ வைக்கும் இறுதிக் காட்சி. (தமிழில் : சலங்கை ஒலி)


15) ஸ்வாதி முத்யம் (1986 - தெலுங்கு) - இயக்குனர் : திரு.கே.விஷ்வநாத்


ஒரு வயதான மனிதனின் கடைசி கால கட்டத்தில் அவனால் அசைப்போடப்படும் அவனது இறந்த கால வாழ்க்கை, அவனது காதல். ஸைக்கோவாக சிகப்பு ரோஜாக்களில் நடித்து நம்மை பயமுறுத்திய கமல் இதில் மனநலம் குன்றியவனாக. (தமிழில் : சிப்பிக்குள் முத்து)


16) புன்னகை மன்னன் (1986) - இயக்குனர் : திரு.கே.பாலசந்தர்


கமல் இரட்டை வேடத்தில் நடித்த படம். இரட்டை வேடமென்றால் இருவரையும் வேறுபடுத்திக் காட்ட ஒருவருக்கு சிகப்பு சட்டையும் மற்றொருவருக்கு கருப்பு சட்டையும் தந்த காலத்தில், காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட நடன ஆசிரியராகவும், சாப்ளின் செல்லப்பாவாகவும் இரு வேறு பாத்திரங்களில் வந்து இரட்டை வேடங்களை இப்படியும் வெளிப்படுத்தலாம் என்று கட்டிய படம். ஈழத் தமிழர்களின் பிரச்சனை, தற்கொலை எதிர்ப்பு போன்றவற்றை மேலோட்டமாக தொட்டு செல்லும் படம்.

17) நாயகன் (1987) - இயக்குனர் : திரு.மணிரத்னம்

உலகின் தலை சிறந்த படங்களுள் ஒன்று. கமலுக்கு இரண்டாம் முறை தேசிய விருது அளித்த படம். அவர் வேலு நாயக்கராக வாழ்ந்து காட்டிய படம். தமிழகத்தின் முதல்வராக இருந்த புரட்சித் தலைவர் திரு. M. G. ராமசந்திரன் அவர்கள் தாம் இயற்கை எய்தும் முன்பு பல முறை பார்த்து ரசித்த படம். (ஒருவரை மரணப் படுக்கையில் மகிழ்விப்பதை காட்டிலும் சிறந்த செயல் வேறு உண்டா?)


18) பேசும் படம் (1987) - இயக்குனர் : திரு. சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


கமலின் மற்றுமொரு புதிய முயற்சி. வசனமே இல்லாத படம். கதை ஒன்றும் புதிது இல்லை என்றாலும்; காதல், சோகம், பழி, நகைச்சுவை போன்ற பலவற்றை வசனமே இல்லாமலும் வெளிப்படுத்த முடியும் என்று கமல் நிரூபித்த படம்.


19) சத்யா (1988) - இயக்குனர் : திரு. சுரேஷ் கிருஷ்ணா


பொதுவாகவே சில இயக்குனர்களின் முதல் படத்தை பார்த்தீர்களானால் மற்ற இயக்குனர்களின் படத்திலிருந்து மாறுபட்டு சிறப்பாக இருக்கும். அப்படங்களை பார்த்தால் அது ஒரு புதிய இயக்குனர் இயக்கிய படம் என்று நம்மால் நம்பவே முடியாது. சாதிக்க வேண்டும் என்ற வெறியுடன் சிறு வயதிலிருந்து அவர்களின் மனதில் பலமுறை அசைபோடப்பட்ட கதையை அவர்கள் படமாக்குவது அதற்கு ஒரு காரணம் என்று நான் நினைக்கிறேன்.

இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு சத்யா.

ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை அழிக்கும் நாயகன் என்ற அரதப்பழசான கதையை காட்சிக்கு காட்சி புதுமை கலந்து அளித்திருப்பார்கள் கமலும், சுரேஷ் கிருஷ்ணாவும்.


20) அபூர்வ சகோதரர்கள் (1989) - இயக்குனர் : திரு. சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


இதுவும் அப்பாவைக் கொன்ற வில்லன்களை பதிவாங்கும் பழைய கதை. புதுமை என்னவென்றால், இரு கமலுக்கும் உள்ள வித்தியாசமே. தமிழ் சினிமா தொழில்நுட்பம் வளராத அன்றைய கால கட்டங்களில், காலை மடக்கி, குழிக்குள் அமர்ந்து குள்ள அப்புவை உருவாக்கிய கமலை பாராட்ட வேண்டியது அவசியம். படத்தின் திருப்புமுனை காட்சியில் இளையராஜாவின் பின்னனி இசை அவர் ஒரு இசைஞாணி என்று பரைசாற்றியது.

21) மைக்கேல் மதன காமராஜன் (1990) - இயக்குனர் : திரு.சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ்


கமல் நான்கு வேடங்களில் நடித்த முழு நீள நகைச்சுவை படம். தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை படங்களுள் ஒன்று. கிரேஸி மோகனின் வசனங்கள் படத்தின் வெற்றிக்கு முதல் காரணம். இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத, குழந்தைகளும் ரசிக்க கூடிய நகைச்சுவை. நட்சத்திரப் பட்டாளமே நமக்கு கிச்சு கிச்சு மூட்டினாலும் நம்மை அதிகம் கவர்வது காமேஷ்வரன், அவிநாசி மற்றும் பீம்பாய் மூவரும் தான்.


22) குணா (1991) - இயக்குனர் : திரு.சந்தானபாரதி


கமல் மனநிலை குன்றியவனாக நடித்த மற்றுமொரு படம். கமல் சமீபத்திய இருவேறு பேட்டிகளில் இப்படத்திற்கு 'மதிகெட்டான் சோலை' என்று பெயர் வைக்க தமிழ் சினிமாவின் சந்தை இடம் கொடுக்கவில்லை என்றும், காதல் கொண்டேன் பார்த்துவிட்டு குணாவிற்கு இப்படி ஒரு climax வைக்காமல் விட்டுவிட்டேனே என்றும் ஆதங்கப் பட்டார்.


படுதோல்வி அடைந்த ஒரு சிறந்த படம் என்பதை தவிர இப்படத்தை பற்றி சொல்ல வேறு ஒன்றும் இல்லை.

23) தேவர் மகன் (1992) - இயக்குனர் : திரு.பரதன்


தமிழ் சினிமாவின் நடிப்புலக சக்கரவர்த்திகள் இருவர் இனைந்து நடித்த படம். இப்படம் பற்றி கமல் கூறுகையில், சிவாஜியைத் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் இப்படம் தேவர் மகன் அல்ல வெறும் மகன் தான் என்று குறிப்பிட்டார். அதை நான் வழி மொழிகிறேன். ஒருபடத்தின் வெற்றியில் கதைக்கு எத்துனை பங்கு உண்டோ அதே சதவிகித பங்கு கதாபாத்திர தேர்வுக்கும் உண்டு.


இப்படத்தின் பெரும் வெற்றியில் பங்கு கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாரு நடிக நடிகையரை தேர்வு செய்த கமலுக்கு உண்டு.



24) மகாநதி (1994) - இயக்குனர் : திரு.சந்தானபாரதி


கமல் நடித்த 200க்கும் மேற்பட்ட படங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒரே ஒரு நல்ல படத்தை சொல்ல சொல்லி யாராவது கேட்டால் நான் யோசிக்காமல் சொல்வேன் மகாநதி என்று. அப்பாவி கிராமத்து குடும்பஸ்தனாக, சிறைக் கைதியாக, ஏமாற்றப்பட்ட ஒரு தொழிலதிபராக, மனைவியை இழந்த ஒரு கணவனாக, குழந்தைகளை இழந்த ஒரு தந்தையாக, பழிவாங்க துடிக்கும் ஒரு சராசரி மனிதனாக இப்படி பல்வேறு பரிமாணங்களில் வந்து கமல் அசத்திய படம். கொச்சின் ஹனிஃபாவின் வில்லத்தனமும் மிகவும் பாராட்டத்தக்கது.

25) சதி லீலாவதி (1995) - இயக்குனர் : திரு.பாலு மகேந்திரா


கமல் கோவை சக்திவேல் கவுண்டராக நகைச்சுவையில் பின்னியெடுத்த படம். கமல், கோவை சரளா, கல்பனா, ரமேஷ் அரவிந்த், ஹீரா அனைவருமே சிறப்பாக நடித்திருப்பது பாராட்டப்பட வேண்டியது.


26) குருதிப் புனல் (1995) - இயக்குனர் : திரு.P.C.ஸ்ரீ ராம்


கமல் போலீஸ் அதிகாரியாக நடித்த படம். வன்முறை சற்று அதிகம் என்றாலும் கதை மற்றும் திரைக்கதை முற்றிலும் வித்தியாசமானது. பாடல்களே இல்லாததும் ஒரு புதுமை. கமல் மற்றும் கௌதமி இருவருக்குமிடையே chemistry இப்படத்தில் work out ஆனது போல், வேறு எந்த நாயக நாயகிக்கும் தமிழ் சினிமாவில் work out ஆனது இல்லை.

27) இந்தியன் (1996) - இயக்குனர் : திரு.ஷங்கர்


லஞ்ச ஒழிப்பை மூலமாக கொண்ட படம். லஞ்சத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் இரண்டாம் முறை போராட்டத்தில் குதித்து லஞ்சத்தை ஒழிக்க பாடுபடுவதே கதை. கமலுக்கு மூன்றாம் முறை தேசிய விருது வாங்கிக் கொடுத்த படம். தமிழ் சினிமாவில் இரட்டை வேடங்களில் பல புதுமைகளை செய்யத் தொடங்கியது இப்படத்திற்கு பிறகு தான்.


28) அவ்வை சண்முகி (1996) - இயக்குனர் : திரு.K.S.ரவிகுமார்


97ல் வெளிவந்திருந்தால் கமலுக்கு நான்காம் முறை தேசிய விருதை வாங்கிக் கொடுத்திருக்கும். 96ல் கமல் இந்தியனுக்கு தேசிய விருது வாங்க கடும் போட்டியாக இருந்தது இப்படம். சட்டபூர்வமாக விவாகரத்து செய்யப்பட்ட கணவன், மனைவி மற்றும் அவர்களின் குழந்தை இம்மூவருக்குமிடையே நடக்கும் கதை. நகைச்சுவையாக சொல்ல முற்பட்டாலும் கதையின் கருத்து மிகவும் serious ஆனது.

29) ஹே ராம் (2000) - இயக்குனர் : திரு.கமலஹாசன்


மகாத்மாவின் மீது பலருக்கு பல விமர்சனங்கள் இருந்த போதிலும் அவர் தேசப்பிதா என்பது மாற்ற முடியாதது. அவரின் கொலையை மையமாக வைத்து கமல் முதல் முறையாக இயக்கிய படம். சாகேத் ராமின் மனைவி கொடூரமாக கற்பழிக்கப்படும் காட்சியாகட்டும், அவரின் நன்பன் கொடூரமாக கொலை செய்யப்படும் காட்சியாகட்டும் நம்மை 50 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு சென்று விடுகின்றன. படத்தை பார்த்து விட்டு மகாத்மாவின் சிலையை பார்க்கும் போது, 'இந்தியா ஒரு அஹிம்சை நாடு' என்று பெரியவர்கள் கூறுவதை கேட்டுத்தான் அவர் புன்னகைக்கிறாரோ என்று தோன்றுகிறது.


30) அன்பே சிவம் (2003) - இயக்குனர் : திரு.சுந்தர் C.

மகாநதிக்கு அடுத்து கமல் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது அன்பே சிவம். கமல், மாதவன் இருவரின் நடிப்பு, ஒரு காதல் தோற்றதும் மறு காதலை இயல்பாய் தேடும் நாயகி, கம்யூனிஸ சிந்தனைகள் என்று பரவலாக பல நல்ல விஷயங்கள் உள்ள படம். தெருக்கூத்துக் கலையை அழகாக கையான்டிருப்பதும் மற்றுமொரு சிறப்பு.











நான் மேலே குறிப்பிட்டுள்ளது எனக்கு மிகவும் பிடித்த கமல் நடித்த 30 திரைப்படங்களை பற்றிய எனது கருத்தே ஆகும். அப்படங்களின் விமர்சனங்கள் இல்லை. இதை படிக்கும் பொழுது கமலின் பல சிறந்த படங்களை நான் விட்டு விட்டதை நீங்கள் உணரலாம்.


அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், அவர்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, அழியாத கோலங்கள், டிக் டிக் டிக், உல்லாச பறவைகள், உயர்ந்த உள்ளம், உன்னால் முடியும் தம்பி, வெற்றி விழா..... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் வேட்டையாடு விளையாடு வரை. ஆனால் என்ன செய்வது? பதிவு எழுதத் தொடங்கும் முன்பு சிறந்த 10 படங்களை மட்டுமே குறிப்பிட முடிவு செய்தேன். அது 30 ஆகி விட்டது.


நான் மேற்கூறிய படங்களை நன்கு கவனித்தீர்களானால் கமலின் திரைத்துரை வாழ்க்கை மூன்றாக பிறிந்து இருப்பதை காணலாம்.


1. ராஜ பார்வைக்கு முன்


இக்கால கட்டத்தில் அவர் நல்ல இயக்குனர்கள் இயக்கிய சில நல்ல படங்களில் நடித்தார். அவ்வளவுதான். இப்படங்களில் வேறு யார் நடித்திருந்தாலும் படங்கள் நன்றாகவே இருந்திருக்கும். அப்படங்களுக்கு கமல் தேவை இல்லை. ஆனாலும் அவ்வியக்குனர்களின் முதல் தேர்வாக கமல் இருந்ததற்கு அவரை நாம் பாராட்ட வேண்டும்.


2. ராஜ பார்வைக்கு பின்; நாயகனுக்கு முன்


இக்கால கட்டத்தில் தனக்கு பொருத்தமான படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அவர் சற்று பின்தங்கினார் என்று தான் கூற வேண்டும். 100வது படமான ராஜ பார்வையிலிருந்து 170வது படமான நாயகன் வரை அவர் நடித்த 70 படங்களில் அவரால் விரல் விட்டு எண்ணக்கூடிய நல்ல படங்களையே தர முடிந்தது. இதற்கு கமல் மீது மட்டுமே நாம் குற்றம் சாட்டுவது தவறு. கமலின் இந்த பின்தங்கலுக்கு ராஜ பார்வையை படுதோல்வி அடைய செய்து சகலகலா வல்லவனையும், தூங்காதே தம்பி தூங்காதேவையும் வெள்ளிவிழா காண வைத்த தமிழ் ரசிகமணிகளும் முக்கிய காரணம். 'Survival Fear' என்பது இக்கால கட்டத்தில் கமலுக்கு அதிகம் இருந்திருக்க வேண்டும் என்று தான் நான் நினைக்கிறேன்.


3. நாயகனுக்கு பின்


இக்கால கட்டத்தில்தான் நாம் கமலின் விஸ்வரூபத்தை கண்டோம். காதல் இளவரசன் கமலஹாசனாக இருந்தவர், பத்மஸ்ரீ, உலக நாயகன், கலைஞாணி, டாக்டர் கமலஹாசனாக மாறியது இக்கால கட்டத்தில்தான். DTS, Digital Film Making, Digital Live Sound Recording, Make-Up ல் புதுமை போன்ற பல புதுமைகளை தமிழ் சினிமாவிற்கு அவர் அறிமுகப்படுத்தியதும் இக்கால கட்டத்தில் தான்.

இதோ அவரின் தசாவதாரத்தை அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். Nov 7 அன்று பிறந்த நாள் காணும் நமது உலக நாயகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவர் மேன்மேலும் பல சாதனைகள் புறியவும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.